உலகப் புகழ்பெற்ற புள்ளியியல் வல்லுநர்... இந்தியாவின் பத்ம விபூஷன் சி.ஆர்.ராவ் காலமானார்!


புள்ளியியல் வல்லுநர் சி.ஆர்.ராவ்

இந்தியாவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற புள்ளியியல் வல்லுநரும், கணிதவியலாளருமான காளியாம்புடி ராதாகிருஷ்ண ராவ் காலமானார். அவருக்கு வயது 102.

கர்நாடகாவின் பழைய மைசூர் மாகாணத்தில் உள்ள ஹாடகாலியில் ஒரு தெலுங்கு குடும்பத்தில் பிறந்தவர் சி.ஆர்.ராவ். ஆந்திராவின் குடூர், நந்திகாமா, விசாகப்பட்டினத்தில் பள்ளிப்படிப்பை முடித்த ராவ், 1943ம் ஆண்டு ஆந்திரா பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் எம்எஸ்சி பட்டமும், கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் புள்ளியியலில் எம்எஸ்சி பட்டத்தை தங்கப் பதக்கத்துடன் பெற்றார்.

பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் முனைவர் பட்டம் பெற்றார். அவர் 1965ல் கேம்பிரிட்ஜில் டிஎஸ்சி பட்டம் பெற்றார். ராவ் முதலில் கேம்பிரிட்ஜில் உள்ள இந்திய புள்ளியியல் நிறுவனம் மற்றும் மானுடவியல் அருங்காட்சியகத்தில் பணிபுரிந்தார். அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், பஃபலோ பல்கலைக்கழகத்தில் ஆய்வுப் பேராசிரியராகவும் பணியாற்றியவர் சி.ஆர்.ராவ். தொடர்ந்து புள்ளியியல் துறையில் பல்வேறு சேவைகளை அவர் செய்து வந்தார்.

75 ஆண்டுகளாக புள்ளியியல் துறையில் சிறந்த பங்களிப்பை அளித்து வந்த ராவ், அந்தத் துறையில் நோபல் பரிசுக்கு இணையாக கருதப்படும் சர்வதேசப் பரிசைப் பெற்றுள்ளார். கணிதத்தில் அவர் ஆற்றிய சேவைகளுக்காக புள்ளியியல் துறையில் உயரிய விருதைப் பெற்றார். இந்திய அரசு அவருக்கு பத்ம விபூஷன் விருது வழங்கி கவுரவித்தது. புள்ளியியல் துறையை நாட்டில் மேம்படுத்த பல பயிற்சித் திட்டங்களை சி.ஆர்.ராவ் உருவாக்கினார். தென்கிழக்காசியாவில் புள்ளியியல் துறை வளர அவரது முயற்சிகள் உறுதுணையாக இருந்தன.

ஐ.நா.சபையின் புள்ளியியல் துறைக் குழுவின் தலைவராக ராவ் இருந்த போது, ஆசிய அளவில் புள்ளியியல் கல்வி மையம் துவங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதன் விளைவாக, ஆசிய பசிபிக் புள்ளியியல் கல்வி நிறுவனம் (Statistical Institute for Asia and Pacific) டோக்கியோவில் 1970ல் தோற்றுவிக்கப்பட்டது. இதில், இந்தியா உள்ளிட்ட 20 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்நிலையில், அமெரிக்காவில் இருந்த அவர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார்.

x