போரால் பாதிக்கப்பட்ட காசாவுக்கு நீளும் உதவிக் கரங்கள்... கப்பலில் 200 டன் உணவு, குடிநீர், மருந்துகள் அனுப்பி வைப்பு!


காசா நகர் மக்கள்

போரால் பாதிக்கப்பட்டுள்ள காசா நகருக்கு சுமார் 200 டன் உணவுப் பொருட்கள் மற்றும் குடிநீர், மருந்துப் பொருட்கள் ஆகியவை சைப்ரஸ் நாட்டின் துறைமுகத்திலிருந்து கடல் வழியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

உணவுப் பொருட்களுடன் செல்லும் கப்பல்

இஸ்ரேல் ராணுவத்தினரின் தொடர் தாக்குதலால் நிலைகுலைந்து போயுள்ள காசா நகரில் மக்கள் கடும் நெருக்கடியில் வாழ்ந்து வருகின்றனர். உணவு, குடிநீர், மருந்துப் பொருட்கள் போன்ற அத்தியாவசியமான பொருட்கள் எதுவுமின்றியும், மின்சாரம் இல்லாமலும் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். உணவு இல்லாததால் பட்டினிச் சாவை எதிர்நோக்கியுள்ள அந்த மக்களுக்கு தற்போது தரை வழியாகவும், வான் வழியாகவும் அளிக்கப்பட்டு வரும் நிவாரணப் பொருள்கள் போதுமான அளவில் இல்லை.

அதனால் கடல் வழியாக காசாவுக்கு நிவாரணப் பொருள்களைக் கொண்டு செல்ல அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் திட்டமிட்டு வருகின்றன.இதற்காக, காசா கடலோரப் பகுதியில் தற்காலிக துறைமுகம் ஒன்றை அமைக்குமாறு அமெரிக்க ராணுவத்துக்கு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டிருந்தார். அந்தப் பணிகள் நடந்து வருகிறது.

போரால் பாதிக்கப்பட்டுள்ள காசா நகரம்

இந்தநிலையில் பிரபல அமெரிக்க சமையல் கலை வல்லுநர் ஜோஸ் ஆண்டர்ஸின் என்பவர் அவரது "வேர்ல்டு ஃபுட் கிச்சன்' (டபிள்யுசிகே) அறக்கட்டளை மூலம் காசா மக்களுக்கு உணவு மற்றும் மருந்து பொருட்களைச் சேகரித்தார். அப்படி சேகரிக்கப்பட்ட உணவுப் பொருள்களை ஸ்பெயின் நாட்டின் "ஓப்பன் ஆர்ம்ஸ்' என்ற சேவை அமைப்புக்குச் சொந்தமான கப்பலில் ஏற்றி காசாவுக்கு நேற்று அனுப்பி வைத்தார்.

அதில் 200 டன் தானிய மாவுப் பொருள்கள், அரசி, புரத உணவுகள், குடிநீர், மருந்துப் பொருள்கள் ஏற்றப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான சைப்ரஸின் லார்னாகா துறைமுகத்திலிருந்து அந்தக் கப்பல் புறப்பட்டுள்ளது. அங்கிருந்து காசாவுக்கு கடல் வழியாகச் செல்ல 15 மணி நேரமாகும். ஆனால், அந்தக் கப்பல் மணிக்கு 3.7 நாட் வேகத்தில் மட்டுமே செல்வதால் அது காசா வந்துசேர மொத்தம் நான்கு நாட்களாகலாம் என்று கூறப்படுகிறது.

கடந்த 2005-ம் ஆண்டுக்குப் பிறகு ஐரோப்பாவிலிருந்து காசாவுக்கு நிவாரணப் பொருள்களைக் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும்.

x