பிரபல ஆடை தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள ஒரு டவலின் விலை 77 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு இருப்பதால் வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஒரு சாதாரண டவல் விலை சந்தையில் ரூ.50 முதல் சில நூறு வரை விற்பனை செய்யப்படுகிறது. நிறுவனங்கள் மற்றும் தரத்திற்கு ஏற்ப விலை மாறுபாடு இருக்கும். ஆனால், ஒரு டவல் விலை ரூ.77,000 என்றால் எப்படியிருக்கும்? பலென்சியாகா (Balenciaga) என்ற ஆடை வடிவமைப்பு நிறுவனத்தின் இணையதளத்தில் அவர்களின் குளியல் துண்டின் விலை ரூ.77,000 ($925 அமெரிக்க டாலர்) என்று பட்டியலிடப்பட்டுள்ளது.
பலரும் இதைக்கண்டு அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்ததாக சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். பாரிஸில் நடைபெற்ற "ஸ்பிரிங் 2024" நிகழ்விலும் இது காட்சிப்படுத்தப்பட்டது. இந்த டவல் டெர்ரி பருத்தி துணியால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் முன்பக்கத்தில் 'Balenciaga' என்ற நிறுவனத்தின் பெயர் நூலால் தைத்து பொறிக்கப்பட்டுள்ளது. இதை நிறுவனம் டவர் ஸ்கெர்ட் என்று அழைக்கிறது.
அதாவது துண்டு தான், ஆனால் பாவாடை போலவும் பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது. இந்த பாவாடை துண்டின் நீளம் முழங்கால் வரை இருக்கிறது. காட்சிப்படுத்தப்பட்ட சில மணிநேரத்திலேயே சமூக வலைத்தளங்களில் இதற்கு எதிரான கருத்துகள் பரவ தொடங்கின. ஒருபடி மேலாக, iKEA நிறுவனமும் தங்களின் எக்ஸ் பக்கத்தில், "இதே தரத்திலான துண்டு எங்களிடம் மலிவு விலையில் கிடைக்கிறது," என்று பதிவிட்டுள்ளது.
நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் இதன் விலை குறித்து கடுமையாக விமர்சித்துள்ளனர். பலென்சியாகா டவல் ஸ்கர்ட் வெறும் $5 (சுமார் 500 ரூபாய்) மட்டுமே தகுதி பெற்றுள்ளதாக ஒப்பீடுகளை இணைய வாசிகள் பதிவிடுகின்றனர். சிலர் இவற்றை ஒரு மரியாதைக்காக வாங்கினாலும், பெரும்பாலானோரிடம் இதற்கு வரவேற்பு இல்லை.