இஸ்ரேல் காசா இடையிலான தற்காலிக போர் நிறுத்தத்தின் இரண்டாம் நாளில், பரஸ்பரம் மேலும் பல சிறைக்கைதி - பிணைக்கைதி விடுவிப்புகள் அரங்கேறுகின்றன.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போரின் 7வது வாரத்தில் சர்வதேச அழுத்தம் காரணமாக தற்காலிக போர் நிறுத்தம் 4 நாட்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே போர் ஒப்பந்தங்களின் அடுத்தக்கட்டமாக இஸ்ரேல் - ஹமாஸ் இடையே பரஸ்பரம் கைதிகள் விடுவிப்புகள் அரங்கேறி வருகின்றன.
இஸ்ரேல் சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதிகளை விடுவித்தால், தங்கள் வசமிருக்கும் பிணைக் கைதிகளை விடுதலை செய்யத் தயாா் என்று ஹமாஸ் ஆயுதக் குழு தெரிவித்தது. இதனையடுத்து, போர் நிறுத்தத்தின் முதல் நாளான நேற்று, இஸ்ரேல் தரப்பில் கல்வீச்சு போன்ற சிறு குற்றங்களில் ஈடுபட்ட 15 சிறுவா்கள் மற்றும் 24 பெண்கள் என 39 பாலஸ்தீன சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டனா்.
பதிலுக்கு 25 பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவித்தது. இவர்களில் 13 பேர் இஸ்ரேலியர்கள்; 12 பேர் தாய்லாந்து நாட்டவர். செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட 13 இஸ்ரேலியா்கள், எகிப்து வழியாக இஸ்ரேல் திரும்பினா். காசாவைவிட்டு ராஃபா எல்லை வழியாக வெளியேறிய தாய்லாந்து நாட்டவா்கள், ஹட்செரிம் விமானப் படைத்தளம் மூலம் இஸ்ரேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அவர்களை தாய்லாந்துக்கு அழைத்துச்செல்ல அந்நாட்டு அதிகாரிகள் இஸ்ரேல் விரைந்துள்ளனர்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஹமாஸ் போராளிகள் தங்கள் வசமிருக்கும் பிணைக்கைதிகளை செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைக்கும் வீடியோ
இரண்டாம் நாளான இன்றும் பரஸ்பர நடவடிக்கையாக இரண்டாவது விடுதலைப் படலம் தொடங்கியது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையே 3:1 என்ற கணக்கில், சிறைக்கைதிகள் - பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுகின்றனர். இந்த கணக்கில் இன்று, இஸ்ரேல் சிறையில் இருக்கும் ஆண் - பெண் - சிறுவர் என காசாவை சேர்ந்த 42 பாலஸ்தீனியர்கள் விடுவிக்கப்படுகின்றனர். பதிலுக்கு தங்கள் வசமிருக்கும் 14 பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்கிறது.
இதையும் வாசிக்கலாமே...