அமெரிக்காவிலிருந்து தென்கொரியாவுக்கு பறந்த சர்வதேச விமானத்தில், போதைப்பொருள் உட்கொண்ட ஒரு பெண், நடுவானில் அவசரகால திறப்பை பலமுறை திறக்க முயன்றதால் பெரும் களேபரம் ஏற்பட்டது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்து தென்கொரியாவின் இன்சியான் நகருக்கு விரைந்த கொரியன் ஏர் விமானத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. தென் கொரியாவை சேர்ந்த ’ஏ’ என்ற அடையாளத்தில் குறிப்பிடப்படும் பெண் ஒருவர், நடுவானில் விமானம் பறக்கும்போது திடீரென அவசரகால கதவை திறக்க முயன்றார். அதிலும் கண்ணாமூச்சி ஆட்டம் போல அவர் மீண்டும் மீண்டும் முயன்றதால், விமானத்தின் ஊழியர்கள் மற்றும் பயணிகள் மத்தியில் பதற்றம் எழுந்தது.
உலகின் நீண்ட நேர விமானப் பயணங்களில் அமெரிக்கா - தென் கொரியா இடையிலான பறத்தலும் ஒன்று. அந்த வகையில் நவ.23 அன்று நியூயார்க்கிலிருந்து இன்சியானுக்கு விரைந்த விமானத்தில், சுமார் 10 மணி நேரமாக சமர்த்தாக வந்த பெண் பயணி ’ஏ’, அதன் பின்னர் தன்னுடைய திருவிளையாடலை ஆரம்பித்திருக்கிறார். இதனால் விமானத்தின் ஊழியர்கள் மற்றும் பயணிகள் அனைவரும் தென் கொரியா வந்து சேரும்வரை உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பயணித்துள்ளனர்.
ஒன்று இரண்டல்ல, பலமுறை அவர் விமானத்தின் அவசர திறப்பை திறக்க முயன்றார். இதனால், அப்பெண்ணை கட்டுப்பாட்டில் வைக்க விமான ஊழியர்களும், பயணிகளும் போராட வேண்டியிருந்தது. ஓய்வு மற்றும் உறக்கத்துக்கு வழியின்றி, பயணிகளும் அப்பெண்ணை கண்காணித்து வந்தனர். மனநிலை பாதித்தவர் போல அப்பெண் தென்பட்டதால், விமானத்தின் பணிப்பெண்கள் சற்று அனுசரணையாகயும் நடந்து கொண்டனர்.
இன்சியான் விமான நிலையத்தை அடைந்ததும், போலீஸார் வசம் அப்பெண் ஒப்படைக்கப்பட்ட பின்னரே அவர் ’மெத்’ எனப்படும் தடைசெய்யப்பட்ட போதைப்பொருளை விழுங்கிவிட்டு இத்தனை களேபரங்களை நடத்தியுள்ளார் என்பது தெரிய வந்தது. மருத்துவ பரிசோதனைகளும் அப்பெண் போதைக்கு ஆளானவர் என்பதை நிரூபித்தன.
இதனையடுத்து விமானப் பாதுகாப்புச் சட்டத்தை மீறியதற்காகவும், போதைப்பொருள் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழும் அப்பெண் மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். பெண் ’ஏ’ மீதான குற்றச்சாட்டுகள் உறுதிசெய்யப்பட்டால், அவசரகால வெளியேறும் கதவைத் திறக்க முயற்சித்ததற்காக 10 ஆண்டுகளுடன், போதைப்பொருள் குற்றத்திற்காக மேலும் 10 ஆண்டுகள் என மொத்தம் 20 ஆண்டுகள் அவர் சிறை தண்டனைக்கு ஆளாவார்.