ஹமாஸ் விடுவித்த பிணைக்கைதிகள் இவர்கள்தான் - பட்டியலை வெளியிட்டது இஸ்ரேல்!


இஸ்ரேல் பிணைக்கைதிகள் விடுவிப்புக்காக ஆம்புலன்ஸ் உடன் காத்திருக்கும் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர்

அக்டோபர் 7 தாக்குதலின் போது ஹமாஸ் படையினரால் பிணைக் கைதிகளாக பலர் பிடிக்கப்பட்டனர். போா் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேல், தாய்லாந்து நாடுகளைச் சேர்ந்த 25 பிணைக் கைதிகளை ஹமாஸ் ஆயுதப் படையினா் வெள்ளிக்கிழமை விடுதலை செய்தனா். தற்போது வீடு திரும்பிய 13 பிணைக் கைதிகளின் பட்டியலை இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதிகளை விடுவித்தால், பிணைக் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யத் தயாா் என்று ஹமாஸ் படை தெரிவித்தது.

ஹமாஸுடனான பரிமாற்ற ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக காசா முனைப் பகுதியில் கடந்த 7 வாரங்களாக சிறைப் பிடித்து வைக்கப்பட்டிருந்த 13 இஸ்ரேலியா்கள், 12 தாய்லாந்து நாட்டவா் என 25 பிணைக் கைதிகளை ஹமாஸ் படையினா் வெள்ளிக்கிழமை விடுவித்தனா்.

ஹமாஸ் வசமிருக்கும் பிணைக்கைதிகள் பட்டியல்

செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட 13 இஸ்ரேலியா்கள், எகிப்து வழியாக இஸ்ரேல் திரும்பினா். காசாவைவிட்டு ராஃபா எல்லை வழியாக வெளியேறிய தாய்லாந்து நாட்டவா்கள், ஹட்செரிம் விமானப் படைத்தளம் மூலம் இஸ்ரேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதேபோன்று இஸ்ரேல் தரப்பில் 24 பெண்கள், கல்வீச்சு போன்ற சிறு குற்றங்களில் ஈடுபட்ட 15 சிறுவா்கள் உள்பட 39 பாலஸ்தீன சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டனா்.

இந்த நிலையில், ஹமாஸ் வெளியிட்ட பிணைக் கைதிகளின் பட்டியலை இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ளது. அதில், மீட்கப்பட்டவர்களில் 11 பேர் வெளிநாட்டவர்கள் என்று இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, கத்தாா், எகிப்து ஆகிய நாடுகள் மேற்கொண்ட மத்தியஸ்தத்தின் ஒரு பகுதியாக மீட்கப்பட்ட 24 ஹமாஸ் பணயக் கைதிகளுக்கு ஈடாக, இஸ்ரேலும் 39 பாலஸ்தீனிய கைதிகளை விடுவித்துள்ளது.

"தாயகம் திரும்பிய குடிமக்களை இஸ்ரேல் அரசு அரவணைக்கிறது. கடத்தப்பட்டவர்கள் மற்றும் காணாமல் போனவர்கள் அனைவரையும் காசாவில் இருந்து திருப்பப் பெறுவதற்கு இஸ்ரேல் அரசு உறுதிபூண்டுள்ளது" என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தாயகம் திரும்பிய குடிமக்கள் ஆரம்ப மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் மற்றும் அவர்கள் திரும்பி வந்தது குறித்து அவர்களது குடும்பத்தினருக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் தாக்குதலில் நொறுங்கிய காசா

தாயகம் திரும்பிய 13 பேர்களில், ஆஷர் குடும்பத்தைச் சேர்ந்த டோரன் காட்ஸ்-ஆஷர் (34), ராஸ் ஆஷர் (4) மற்றும் அவிவ் ஆஷர் (2) என மூன்று பேர், அலோனி குடும்பத்தைச் சேர்ந்த டேனியல் அலோனி (45), அமெலியா அலோனி (5) என 2 பேர், மோண்டர் குடும்பத்தைச் சேர்ந்த ரூத் முண்டர் (78), கெரன் மோண்டர் (54) மற்றும் ஓஹாட் மோண்டர் (9) 3 பேர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களைத் தவிர, மேலும் ஐந்து இஸ்ரேலிய பிரஜைகளான ஆதினா மோஷே (72), ஹனா கட்ஸிர் (76), மார்கலிட் மோஸஸ் (77), ஹன்னா பெர்ரி (79) மற்றும் யாஃபே ஆதார் (85) ஆகிய 13 பேரின் விவரங்களை வெளியிட்டுள்ளது. மேலும், விடுவிக்கப்பட்ட பிணைக் கைதிகள் தங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கும்போது, பாதுகாப்புப் படையினருடன் அரசு அதிகாரிகளும் உடன் சென்றதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

x