லண்டன் விமான நிலையத்தில் ஒரே முகத்தோற்றம் கொண்ட இருவர், ஒரே பெயருடன், ஒரே விமானத்தில் பயணிக்க வந்த சம்பவம் விமான நிலைய ஊழியர்கள் மட்டுமின்றி சம்பந்தப்பட்டவர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் 58 வயதான மார்க் கார்லண்ட் என்பவர் வசித்து வருகிறார். திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ள மார்க், தற்போது தனியாக வசித்து வருகிறார். தாய்லாந்து நாட்டிற்கு அடிக்கடி பயணிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தார். இதன் ஒரு பகுதியாக கடந்த 5ம் தேதி தாய்லாந்து செல்வதற்காக லண்டனில் உள்ள ஹீத்ரு விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தார். அப்போது அவரது பாஸ்போர்ட்டை ஆய்வு செய்த விமான நிலைய ஊழியர்கள், அவர் ஏற்கனவே செக் இன் செய்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் விமான நிலையத்திற்கு உள்ளே சென்றவர் எவ்வாறு வெளியே இருக்கிறார் எனவும் குழம்பியுள்ளனர். அப்போது அதே விமானத்தில் மற்றொரு மார்க் கார்லண்ட் என்பவர் பயணிப்பது தெரியவந்தது. உடனடியாக அவரை வெளியே வருமாறு பணியாளர்கள் அழைத்துள்ளனர். வெளியே வந்த மார்க் கார்லாண்டை கண்ட விமான நிலைய ஊழியர்கள் மற்றும் மார்க் கார்லண்ட் என அனைவருமே ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்தனர். இருவரும் பார்ப்பதற்கு ஒரே போல் இருந்ததோடு, இருவரும் தங்களது தலையை மொட்டை அடித்திருந்ததும் தெரிய வந்தது.
விசாரணை நடத்திய போது, ஏற்கனவே விமான நிலையத்திற்கு உள்ளே சென்ற மார்க் கார்லண்ட் 62 வயதானவர் என்ற வித்தியாசம் மட்டும் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்ட போது, இருவருமே லண்டனில் வெவ்வேறு பகுதிகளில் சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் வசித்து வந்தது தெரிய வந்தது. பல ஆண்டுகளாகவே இருவரும் தாய்லாந்துக்கு அடிக்கடி பயணித்து வந்ததும் தெரிய வந்தது. இதைவிட ஆச்சரியமாக, இருவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய மற்றொரு சம்பவம், இருவருமே திருமணம் ஆகி நான்கு குழந்தைகளுக்கு தந்தையானதும், தற்போது மனைவியை விட்டு தனியாக வசித்து வருவதும் தெரிய வந்தது.
இதையடுத்து இருவரது பாஸ்போர்ட்டுகளையும் சரிபார்த்த அதிகாரிகள் இருவரையும் விமானத்தில் பயணிக்க அனுமதி அளித்தனர். இருவரும் ஒரே விமானத்தில் அடுத்தடுத்த இருக்கைகளில் அமர்ந்து தாய்லாந்துக்கு பயணம் செய்தனர். பல ஆண்டுகளாக லண்டனில் வசித்து வந்த போதும், இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டதில்லை எனவும், முதல் முறையாக இந்த குழப்பம் நேர்ந்து தாங்கள் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பை உருவாக்கி இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளது ஊழியர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தற்போது இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.