இஸ்ரேல் செல்கிறார் எலான் மஸ்க் - காசா எல்லையோர பகுதிகளை பார்வையிடுகிறார்!


எலான் மஸ்க்

எக்ஸ் நிறுவனத்தின் தலைவரும், உலகின் நம்பர் 1 பணக்காரருமான எலான் மஸ்க் அடுத்த வாரம் இஸ்ரேலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அப்போது அவர் அக்டோபர் 7ம் தேதி ஹமாஸால் தாக்கப்பட்ட காசா எல்லைக்கு அருகிலுள்ள நகரங்களுக்குச் செல்வார் என்று ஹீப்ருவை மேற்கோள் காட்டி ஜெருசலேம் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

எலான் மஸ்க் தனது பயணத்தின் போது இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் மற்றும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்திக்கவுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வார தொடக்கத்தில், எக்ஸ் சமூக வலைதள பதிவில், எக்ஸ் சமூக வலைதளத்தின் விளம்பர வருவாய் மற்றும் சந்தாதாரர்கள் மூலம் கிடைக்கும் அனைத்து வருமானத்தையும், போரினால் பாதிக்கப்பட்ட இஸ்ரேல், காசா மருத்துவமனைகள் அங்குள்ள செஞ்சிலுவைச் சங்கம், கிரசன்ட் ஆகியவற்றிற்கு நன்கொடையாக அளிப்பதாக மஸ்க் அறிவித்தார்.

மற்றொரு பதிவில், "நிதி எவ்வாறு செலவழிக்கப்படுகிறது என்பதை நாங்கள் கண்காணிப்போம் மற்றும் செஞ்சிலுவை, பிற சேவை நிறுவனங்களிடம் இருந்து சிறந்த யோசனைகள் வரவேற்கப்படுகின்றன. இனம், மதம் அல்லது வேறு எதையும் பொருட்படுத்தாமல் அப்பாவிகள் குறித்தே கவலைப்பட வேண்டும்." என்று தெரிவித்திருந்தார்.

இஸ்ரேல் குண்டுவீச்சில் உருக்குலைந்த காசா நகரம்

கடந்த மாதம், இஸ்ரேல் தாக்குதலில் காசாவின் தொலைத்தொடர்பு கேபிள் துண்டிக்கப்பட்டு இருந்த நிலையில், எலான் மஸ்க் தனது லட்சியமான புதிய ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள் மூலம் காஸா பகுதிக்கு இணைய சேவை வழங்க விரும்புவதாகக் கூறியிருந்தார், இது தகவல் தொடர்பு அமைச்சர் ஷ்லோமா கர்ஹி உட்பட இஸ்ரேலிய அதிகாரிகளிடையே கோபத்தை தூண்டியது.

கர்ஹி அவ்வாறு செய்ய முயற்சிக்கும் எந்த நடவடிக்கையையும் எதிர்த்துப் போராடுவதாகக் கூறினார், இருப்பினும் காசாவிற்கு ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள் மூலம் இணைய சேவை வழங்கப்பட்டால், அது முற்றிலும் மனிதாபிமான காரணங்களுக்காக பயன்படுத்தப்பட்டது என்பதை உறுதிப்படுத்த நிறுவனம் "அசாதாரண நடவடிக்கைகளை" எடுக்கும் என்று மஸ்க் வலியுறுத்தினார். முன்னதாக ரஷ்யா - உக்ரைன் போரின் போதும் ஸ்டார் லிங்க் மூலம் எலான் மஸ்க் இணைய சேவையை வழங்கியிருந்தார்.

எலான் மஸ்க்

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் குழுவினருக்கும் இடையில் தொடங்கும் நான்கு நாள் போர் நிறுத்தத்தின் முதல் நாள் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இதில் பணயக்கைதிகள், பாலஸ்தீனிய கைதிகள் மற்றும் காசா பகுதிக்குள் நுழையும் முக்கியமான மனிதாபிமான உதவிகள் விடுவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக். 7-ம் தேதி இஸ்ரேல் மீது காசா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அதிகாரப்பூர்வமாக போர் அறிவித்து ஒரு மாதத்துக்கும் மேலாக காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

கடல், வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து தற்போது தரை வழியாக தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம், காசாவின் மருத்துவமனைகள், மசூதிகள், முகாம்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்துகிறது. இப்போருக்கு பல நாடுகள் கண்டனங்கள் தெரிவித்த நிலையில், 1,300க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர். அதே நேரத்தில் காசாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை சுமார் 15,000 ஆக உயர்ந்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


x