ஆப்கானிஸ்தானில் அரசு ஒத்துழைப்பு, வர்த்தகத்தை விரிவுபடுத்துவது குறித்து தலிபான் அரசின் வெளியுறவுத் துறை அமைச்சருடன் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆதரவுடன் இருந்த அரசுடன் 20 ஆண்டு போராட்டத்துக்குப் பின்னர், கடந்த 2021ல் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியை இந்தியா இன்னும் அங்கீகரிக்கவில்லை.
தலிபான்கள் அதிகாரத்துக்கு வந்த பின்னர், அங்குள்ள தூதரக அதிகாரிகளை இந்தியா திரும்பப் பெற்றது. இந்நிலையில், கடந்த 2022 ஜூன் மாதத்தில், இந்தியா காபூலுக்கு ஒரு தொழில்நுட்ப குழுவை அனுப்பி, ஆப்கானிஸ்தானில் மீண்டும் தனது ராஜாங்க இருப்பை நிறுவியது.
இந்நிலையில் தலிபான்கள் அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் அமீர் கான் முத்தாகியை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் (பிஏஐ) பிரிவின் இணைச் செயலாளர் ஜே.பி.சிங் தலைமையிலான குழுவினர் நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பில் ஆப்கானிஸ்தானுடனான உறவு மற்றும் வர்த்தகத்தை விரிவுபடுத்துவதில் இந்தியாவின் ஆர்வம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அப்துல் கஹர் பால்கி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
“பிஏஐ-க்கான இந்திய வெளியுறவு அமைச்சக இணைச் செயலாளர் ஜே.பி.சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் மாவ்லாவி அமீர் கான் முத்தாகியை சந்தித்தார். இதில் ஆப்கானிஸ்தான்-இந்தியா உறவுகள், பொருளாதார மற்றும் போக்குவரத்து விஷயங்கள், உள்நாட்டு பிரச்சினைகள் குறித்து ஆழமான விவாதம் நடைபெற்றது.
ஆப்கானிஸ்தானுடன் அரசியல் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதிலும், சபாஹார் துறைமுகம் வழியாக வர்த்தகத்தை மேம்படுத்துவதிலும் இந்தியா ஆர்வமாக உள்ளது குறித்து இந்த சந்திப்பில் எடுத்துரைக்கப்பட்டது.
ஆப்கானிஸ்தான் குடிமக்களுக்கு விசா வழங்கும் செயல்முறையை எளிதாக்குமாறு இந்தியாவிடம், முத்தாகி இந்த சந்திப்பின்போது வலியுறுத்தினார்." இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.