செங்கடல் பகுதியில் சரக்குக் கப்பலின் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் முதல் முறையாக மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் மாதம் காசா பகுதியில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு பதிலடியாக, போரை அறிவித்த இஸ்ரேல், கடந்த 5 மாத காலமாக காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காசா பகுதியில் இந்த போர் காரணமாக உயிரிழந்துள்ளனர். இதேபோல் இஸ்ரேல் தரப்பிலும் 1500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே காசா பகுதி மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்தும் ஈரான் நாட்டின் ஆதரவு கொண்ட ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக செங்கடல் பகுதியில் பயணிக்கும் சரக்கு கப்பல்களை குறி வைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். கடந்த நவம்பர் 19-ம் தேதி துவங்கி தற்போது வரை 66 முறை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் சரக்குக் கப்பல்கள் சேதம் அடைந்துள்ளன. ஆனால், உயிரிழப்புகள் எதுவும் பதிவாகாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று செங்கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த லைபீரியாவுக்குச் சொந்தமான பார்படாஸ் நாட்டின் கொடியுடன் பயணித்த சரக்கு கப்பலின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த ஏவுகணை தாக்குதலில், கப்பலில் இருந்த மூன்று சிப்பந்திகள் உயிரிழந்திருப்பதாக அமெரிக்கப் படையினர் உறுதி செய்துள்ளனர். மேலும் கப்பலில் இருந்த அனைத்து பணியாளர்களும் உடனடியாக சிறியரக படகுகள் மூலம் தப்பி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட கப்பலை மீட்கவும், மேலும் தாக்குதல்களைத் தடுக்கவும், சம்பவம் நடந்த இடத்திற்கு அமெரிக்க கப்பற்படையைச் சேர்ந்த போர்க்கப்பல் ஒன்று விரைந்து உள்ளது. இதுவரை நடைபெற்ற தாக்குதல்களில் முதல் முறையாக உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, ஹவுதி தாக்குதலில் சேதமடைந்த ட்ரூ கான்பிடன்ஸ் கப்பலில் இருந்து உயிர்தப்பிய பணியாளர்கள் 21 பேர், கடலில் தற்காலிக படகில் மிதந்து கொண்டிருந்தனர். செங்கடல் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ்.கொல்கத்தா கப்பலின் வீரர்கள், அவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்டனர். அந்த பரபரப்பான வீடியோ காட்சிகளையும் அவர்கள் இன்று வெளியிட்டுள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
#BREAKING: நடிகர் அஜித்குமார் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி!