'படைகள் தயாராக உள்ளன’ - எல்லையில் வாலாட்டும் சீனாவுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!


இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

லடாக், அருணாச்சலப் பிரதேச எல்லைகளில் சீனாவுடன் பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்தியாவை தாக்கினால், நமது படைகள் தக்க பதிலடி கொடுக்க தயாராக உள்ளன என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

இந்தியா - சீனா எல்லை பிரச்சினை

'இந்தியாவின் பாதுகாப்பு திறனை வெளிப்படுத்துதல்' என்ற கருப்பொருளில் தனியார் செய்தி நிறுவனம் 'பாதுகாப்பு உச்சி மாநாடு-2024’ என்ற நிகழ்ச்சியை டெல்லியில் நடத்தி வருகிறது. இந்த மாநாட்டில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றுப் பேசியதாவது:

"நாம் எல்லா நேரங்களிலும் போருக்கு தயாராக இருக்க வேண்டும். அமைதி காலத்தில் கூட நாம் தயாராக இருக்க வேண்டும். தரை, வான்வழி அல்லது கடல் எந்த வழியிலும் இந்தியாவைத் தாக்கினால் நமது படைகள் கடுமையாக பதிலடி கொடுக்கும். நாம் ஒருபோதும் யாருடைய நிலத்தையும் ஆக்கிரமிக்கவில்லை. ஆனால் யாராவது நம்மை தாக்கினால், தகுந்த பதிலடி கொடுக்கும் நிலையில் படைகள் தயாராக உள்ளன. கடந்த 2014-ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி அரசு ஆட்சிக்கு வந்தபோது, பாதுகாப்புத் துறையை நாங்கள் முன்னுரிமையாகக் கொண்டிருந்தோம்.

ராஜ்நாத் சிங்

தற்சார்பு மற்றும் தன்னம்பிக்கை ஊக்குவிக்கப்பட்டது. நாங்கள் 'இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தில் பல முன் முயற்சிகளை அறிமுகப்படுத்தினோம். எங்கள் கவனம் ராணுவத்தை நவீனமயமாக்கலில் இருந்தது. முந்தைய அரசுகள், பாதுகாப்புத் துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று நான் கூறவில்லை. ஆனால் நாங்கள் பாதுகாப்புத் துறையில் தற்சார்பை கொண்டு வந்தோம்” என்றார்.

காஷ்மீர், லடாக் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் சீனாவுடன் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சரின், படைகள் தயாராக உள்ளன என்ற கருத்து சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

x