டெஸ்லா நிறுவன தலைமை நிதி அதிகாரியாக இந்தியர் நியமனம்!


வைபவ் தனேஜா

எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனத்தின் புதிய தலைமை நிதி அதிகாரியாக (சிஎப்ஓ) இந்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சில காலமாகவே அமெரிக்க டாப் நிறுவனங்களில் இந்தியர்களுக்கு டாப் பதவிகள் வழங்கப்படும் நிலையில், அதில் இவரும் இணைந்துள்ளார்.

டெஸ்லா

உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவராக இருப்பவர் எலான் மஸ்க். இவர் டெஸ்லா, போரிங் கம்பெனி, ஸ்பேஸ்எக்ஸ் எனப் பல நிறுவனங்களை சொந்தமாக நடத்தி வருகிறார். இது தவிர கடந்த ஆண்டு தான் இவர் ட்விட்டர் நிறுவனத்தையும் வாங்கியிருந்தார்.

இதில் டெஸ்லா நிறுவனம் தான் இவருக்கு அதிகப்படியான வருமானத்தை ஈட்டி தருகிறது. மின்சார கார் சந்தையில் உலகளவில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்திய நிறுவனமாக டெஸ்லா இருக்கிறது. மின்சார கார்கள் என்றாலே போரடிக்கும் என்ற நிலையை மாற்றி அதிகளவில் மக்களை மின்சார கார்களை நோக்கி அழைத்து வந்ததே டெஸ்லா தான்.

இதற்கிடையே இந்த டெஸ்லா நிறுவனத்திற்கு புதிய தலைமை நிதி அதிகாரியாக( சிஎஃப்ஓ) இந்தியாவைச் சேர்ந்த வைபவ் தனேஜா(45) நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே, அமெரிக்காவின் பல்வேறு நிறுவனங்களில் இந்தியர் அல்லது இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கு முக்கிய பதவிகள் அளிக்கப்படும் நிலையில், அந்த வரிசையில் வைபவ்வும் இணைந்துள்ளார்.

வைபவ் தனேஜா ஏற்கெனவே டெஸ்லாவின் தலைமை கணக்கியல் அதிகாரியாக (சிஏஓ) இருந்து வந்தார். இந்தச் சூழலில் தான் அவர் இப்போது கூடுதலாக டெஸ்லாவின் சிஎப்ஓவாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளாக டெஸ்லாவின் சிஎப்ஓவாக இருந்த சச்சரி கிர்கோர்ன் சமீபத்தில் அந்த பதவியில் இருந்து விலகிய நிலையில், இப்போது புதிய சிஎப்ஓ அறிவிக்கப்பட்டுள்ளார்.

வைபவ் தனேஜா

45 வயதான வைபவ், கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் முதலே டெஸ்லாவின் சிஏஓ அதிகாரியாக பணியாற்றி வந்தார். கடந்த 2021 ஜனவரி மாதம் அவர் டெஸ்லாவின் இந்தியப் பிரிவின் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டார்.

டெல்லி பல்கலைக்கழகத்தில் வணிகவியல் பிரிவில் வைபவ் பட்டம் பெற்றுள்ளார். டெஸ்லா நிறுவனம் கடந்த 2016-ல் சூரிய ஒளியில் இருந்து மின்சாரத்தைத் தயாரிக்கும் சோலார்சிட்டி நிறுவனத்தை வாங்கியது. அந்த சோலர்சிட்டி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த வைபவ் கடந்த 2017-ல் டெஸ்லாவில் இணைந்தார்.

சோலர்சிட்டி நிறுவனத்தின் துணைத் தலைவராக இருந்து இரு நிறுவனங்களின் கணக்குகளையும் பக்காவாக ஒருங்கிணைத்துக் காட்டினார். சோலர்சிட்டியில் இணைவதற்கு முன்பு 1999 முதல் 2016 வரை அவர் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் உள்ள பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் என்ற நிறுவனத்தில் பணிபுரிந்தார். தொழில்நுட்பம், சில்லறை வணிகம் மற்றும் தொலைத்தொடர்பு என பல துறைகளில் பன்னாட்டு நிறுவனங்களில் சுமார் 17 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர் வைபவ்.

எலான் மஸ்க்கிற்கு மிகவும் லாபகரமானதாக இருக்கும் நிறுவனங்களில் முக்கியமானது இந்த டெஸ்லா. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் டெஸ்லாவின் ஆதிக்கம் அதிகமாகவே இருக்கிறது. சில ஆண்டுகளாகவே இந்தியாவில் கால்பதிக்க டெஸ்லா தீவிரமாக முயன்று வருவது குறிப்பிடத்தக்கது.

x