தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்... துனீசியாவில் தாறுமாறாக எகிறிய குடிநீர் கட்டணம்!


துனீசியாவில் வரலாறு காணாத வறட்சி

கடும் தண்ணீர் பற்றாக்குறை மற்றும் வரலாறு காணாத வறட்சி காரணமாக தண்ணீருக்கான கட்டணங்களை அதிரடியாக உயர்த்தி துனீசிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

வட ஆப்பிரிக்க நாடான துனீசியாவில் ஆறுகள் போன்ற நீர்நிலைகள் இல்லாததால், நிலத்தடி நீர் மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள் மூலமாக மட்டுமே குடிநீர் கிடைத்து வருகிறது. இதனால் ஒட்டுமொத்த குடிநீர் விநியோக திட்டமும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. நீரை தேக்கி வைக்க அணைகள் போன்றவை இல்லாததால் ஆண்டின் பெரும்பகுதியிலும் மக்கள் குடிநீர் பிரச்சினையை எதிர்கொண்டே வருகின்றனர்.

நீர்நிலைகள் வேகமாக காய்ந்து வருவதால் குடிநீர் கட்டணங்கள் உயர்த்தப்பட்டது

அந்த வகையில் கடந்த ஆண்டு குடிநீருக்காக கோட்டா முறை ஒன்றை அறிவித்த அரசு, குடிநீரை விவசாயத்திற்கு பயன்படுத்துவதற்கும் தடை விதித்துள்ளது. இந்நிலையில் கடந்தாண்டு மழைப்பொழிவு ஓரளவிற்கு இருந்த போதும், போதுமான அளவில் இல்லை என அரசு அறிவித்துள்ளது. தற்போது அங்கு கோடைக்காலம் துவங்கியுள்ளதோடு, கடும் வறட்சியும் நிலவி வருகிறது. இதனால் குடிநீருக்கு மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

சுமார் 13 சதவீதம் அளவிற்கு குடிநீர் கட்டணம் உயர்த்தப்பட்டதால் மக்கள் அவதி

இதையடுத்து, குடிநீருக்கான கட்டணத்தை உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. 40 கன அடி வரை பயன்படுத்தும் குடியிருப்புகளுக்கு எவ்வித கட்டண உயர்வும் இல்லை. ஆனால் அதற்கு மேல் பயன்படுத்துவோருக்கு இந்திய மதிப்பில் ஒரு கன அடிக்கு ரூ.20 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

குறிப்பாக சுற்றுலா பயணிகள் மற்றும் சுற்றுலா சார்ந்த இடங்களில் குடிநீருக்கான பயன்பாட்டிற்கான கட்டணங்கள் மிக அதிக அளவில் அதிகரித்துள்ளது. இதன்படி ஒரு கன அடி தண்ணீரை பயன்படுத்த சுற்றுலா பயணிகள் ரூ.40 வரை செலுத்த வேண்டி இருக்கும். இது முந்தைய கட்டணத்தைவிட 13 சதவீதம் அதிகம் ஆகும். வரும் காலங்களில் நீர் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும் என்கிற அச்சம் அந்நாட்டு மக்களிடையே எழுந்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

x