அடுத்தடுத்து அதிர்ச்சி... இந்திய குச்சிப்புடி கலைஞர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை


குச்சிப்புடி கலைஞர் அமர்நாத் கோஷ்

பிரபல குச்சிபுடி கலைஞர் அமர்நாத் கோஷ் அமெரிக்காவில் சுட்டுக் கொலை செய்யப்பட்டு இருக்கும் தகவலை அவரது நண்பர்கள் உறுதி செய்துள்ளனர்.

கொல்கத்தாவைச் சேர்ந்த அமர்நாத் கோஷ் இந்தியாவின் பாரம்பரிய நடனங்களின் மீது பெரும் விருப்பம் கொண்டிருந்தார். சிறுவயதிலேயே அவரது தந்தை இறந்துவிட்ட நிலையில், தாயாருடன் அவர் சென்னை வருகை தந்தார். சென்னையில் உள்ள கலாக்‌ஷேத்ரா அகாடமியில் அவர் குச்சிப்புடி நடனத்தை பயின்று கொண்டார். இதையடுத்து இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று அவர் குச்சிப்புடி நடன நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவரது தாயாரும் காலமானார்.

குச்சிப்புடி கலைஞர் அமர்நாத் கோஷ்

இதையடுத்து அமெரிக்காவிற்கு பிஹெச்டி படிப்பிற்காக அவர் சென்றிருந்தார். மிசவுரி மாகாணத்தில் உள்ள செயின்ட் லூயிஸ் நகரத்தில் கல்லூரி ஒன்றில் அவர் இதற்கான படிப்புகளை மேற்கொண்டு இருந்தார். இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, வீட்டின் அருகே நடைபயிற்சி மேற்கொண்டு இருந்த அமர்நாத் கோஷை மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ளனர். இது குறித்து யாருக்கு தகவல் அளிப்பது என்பதில் போலீஸாருக்கு குழப்பம் ஏற்பட்டதால் நேற்று வரை இது தொடர்பான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

குச்சிப்புடி கலைஞர் அமர்நாத் கோஷ்

இந்த நிலையில் அமர்நாத்தின் நண்பரும் இந்திய தொலைக்காட்சி நடிகருமான தேவலீனா பட்டாசர்ஜி, இந்த தகவலை தனது எக்ஸ் தள பக்கத்தில் உறுதி செய்துள்ளார். மாலை வீட்டின் அருகே நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது மர்ம நபர்கள், அமர்நாத்தை பலமுறை துப்பாக்கியால் சுட்டதாக போலீஸார் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் அவரது உடலை பெற்றுக்கொள்ள உறவினர்கள் யாரும் இல்லாததால், கூடுதல் தகவல் எதுவும் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்காவில் வசித்து வரும் இந்தியர்கள் சிலர் அவரது உடலை இந்தியாவிற்கு திரும்ப அனுப்ப முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகம் இணைந்து, அவரது உடலை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷின் நண்பர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்காவில் சமீபகாலமாக இந்தியர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. இந்திய வம்சாவளியினரின் வழிபாட்டு தலங்கள் குறிவைத்து தாக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் மர்ம நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

2 தொகுதிகள் தான்... திமுக கறார்: பேச்சுவார்த்தைக்குச் செல்லாமல் விசிக நிர்வாகிகளுடன் திருமா ஆலோசனை!

வெளிநாட்டு சுற்றுலா பயணி கூட்டு பாலியல் பலாத்காரம்: 7 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்!

x