ஃபேஸ்புக்கில் செய்திகள் வெளியாவதை நிறுத்தும் மெட்டா... ஆஸ்திரேலியாவின் கெடுபிடியால் அதிரடி முடிவு!


ஃபேஸ்புக்

ஆஸ்திரேலிய அரசு விதித்த புதிய கெடுபிடியால் அந்நாட்டில் முகநூலில் செய்திகள் வெளியாவதை நிறுத்துவதாக மெட்டா அறிவித்துள்ளது.

மெட்டா நிறுவனம்

இணைய நிறுவனங்கள் உரிம ஒப்பந்தங்களை பெறுவது கட்டாயம் என ஆஸ்திரேலிய அரசு விதிகளை வகுத்திருப்பதால் ஆஸ்திரேலியாவுக்கும், மெட்டாவுக்கும் இடையே புதிய பிரச்சினைக்கு வழிகோலியுள்ளது.

மேலும், கடந்த 2021-ல் ஆஸ்திரேலிய அரசு கொண்டு வந்த சட்டம், மெட்டா போன்ற சமூக வலை தொழில்நுட்ப நிறுவனங்கள், செய்தி இணைப்புகளுக்கு எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் மத்தியஸ்தரை நியமிக்கும் அதிகாரம் அரசுக்கு உள்ளது என தெரிவிக்கிறது.

ஃபேஸ்புக்கில் செய்தி, கட்டுரைகளுக்கான இணைப்புகள் தோன்றும் போது ஃபேஸ்புக், கூகுள் ஆகியவை நியாயமற்ற முறையில் பயனடைகின்றன என சில செய்தி வெளியீட்டாளர்கள் தெரிவித்தனர். ஆஸ்திரேலிய அரசும் இதை ஆமோதித்தது.

ஃபேஸ்புக்கில் செய்திகள்

இந்நிலையில், இணைய நெரிசலை தவிர்ப்பதற்காக செய்தி, அரசியல் பதிவுகளை ஊக்குவிப்பதை மெட்டா குறைத்து வருவதாகவும், இப்போது தோன்றும் செய்தி இணைப்புகள், பயனர்களின் பின்னூட்டங்களின் ஒரு பகுதியே எனவும் மெட்டா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா, அமெரிக்கா நாடுகளில் செய்திகளை ஊக்குவிக்கும் பிரிவு (டேக்), ஃபேஸ்புக்கில் நீக்கப்படும் என மெட்டா அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனியில் ஆகிய நாடுகளில் இந்த வசதி நீக்கப்பட்டதாக மெட்டா தெரிவித்துள்ளது. மேற்கண்ட நாடுகளில் பாரம்பரிய செய்தி பதிவுகளுக்கான புதிய வணிக ஒப்பந்தங்களில் நாங்கள் ஈடுபடமாட்டோம். மேலும், செய்தி வெளியீட்டாளர்களுக்கு ஃபேஸ்புக் புதிய செயல்பாடுகளை வழங்காது என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

முகநூல்

ஆஸ்திரேலிய அரசின் 2021 சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தே, மெட்டா தற்போது ஆஸ்திரேலியாவில் தனது வலைதளப் பக்கத்தில் செய்திகள் என்ற பிரிவை நீக்குவதாக அறிவித்துள்ளது. மெட்டாவின் இந்த நடவடிக்கை காரணமாக, ஊடகங்களின் வணிக நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடக நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

2023-ம் ஆண்டில் கனடாவிலும் இதேபோன்ற ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டது. தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ள 26 மில்லியன் மக்கள் தொகையில் சுமார் 22 மில்லியன் பேர் ஃபேஸ்புக் பயனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

x