‘ஜின்பிங் ஒரு சர்வாதிகாரி’ அமெரிக்க - சீன அதிபர்கள் நேரடி சந்திப்பு முடிந்த சூட்டில் போட்டுத்தாக்கிய ஜோ பைடன்


ஜோ பைடன் - ஜி ஜின்பிங்

அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்ட சீன அதிபர் ஜி ஜின்பிங் உடனான நேரடி சந்திப்பு முடிந்த சூட்டில், ‘ஜின்பிங் ஒரு சர்வாதிகாரி’ என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வர்ணித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் நடந்த ஆபெல் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங் சான்பிரான்சிஸ்கோ நகருக்குச் சென்றார். அதன்பின் கலிபோர்னியா சென்ற அதிபர் ஜின்பிங்கை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரவேற்றார்.

ஜோ பைடன் - ஜி ஜின்பிங்

இருவரும் தனியாகச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இரு நாட்டு ராணுவ உறவு, ரஷ்யா-உக்ரைன் போர், தைவான் விவகாரம் உள்ளிட்டவை குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிய வந்துள்ளது.

இந்தச் சந்திப்புக்கு பிறகு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், ‘சீன அதிபரை இன்னும் சர்வாதிகாரியாகத்தான் நீங்கள் கருதுகிறீர்களா?’ என செய்தியாளர்கள் கேட்டனர்.

இதற்கு பதிலளித்த அதிபர் ஜோ பைடன், ‘‘ஜி ஜின்பிங் கம்யூனிச நாட்டை வழிநடத்தும் ஒரு சர்வாதிகாரி. சீன அரசாங்கம் பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது முற்றிலும் மாறுபட்டது’’ என தெரிவித்தார். உலகின் இருபெரும் பொருளாதார நாடுகள் இடையே கடந்த ஒரு வருடமாக பனிப்போர் நிலவி வந்தது. இரு நாடுகளின் தலைவர்கள் இடையேயும் எந்தவித பேச்சுவார்த்தையும் இல்லை.

ஜோ பைடன் - ஜி ஜின்பிங்

அவற்றை உடைக்கும் விதமாக, தற்போது சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக இரு நாட்டுத் தலைவர்களும் நேரடி சந்திப்பில் உரையாடி இருக்கின்றனர். இந்த சந்திப்பை இரு தரப்பும் ஆக்கபூர்வமானதாகவும், தொடர் இராஜதந்திர மற்றும் பொருளாதார மோதல்களால் பாதிக்கப்பட்ட உறவை இயல்பாக்குவதற்கான ஒரு படியாகவும் கொண்டாடினர்.

x