பிளே ஸ்டேஷன் தயாரிப்பு பிரிவில் 900 பேரை பணி நீக்கம் செய்ய சோனி நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது சோனி ஊழியர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானை தலைமையிடமாகக் கொண்ட சோனி இன்ட்ராக்டிவ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம், உலகம் முழுவதும் பல்வேறு விதமான தொழில்நுட்ப உபகரணங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. குறிப்பாக, இந்நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் பிளே ஸ்டேஷன்கள் என்று அழைக்கப்படும் கேமிங் கன்ஸோல்கள் உலகம் தழுவிய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நவீன தொழில்நுட்பங்களுடன் அவ்வப்போது மேம்படுத்தப்பட்ட பிளே ஸ்டேஷன்களை சோனி நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது.
அந்த வகையில் தற்போது பிஎஸ்5 என்ற பிளே ஸ்டேஷன் தற்போது விற்பனையாகி வருகிறது. நடப்பாண்டில் சுமார் 25 மில்லியன் பிளே ஸ்டேஷன்களை விற்பனை செய்ய சோனி நிறுவனம் இலக்கு நிர்ணயித்தது. இருப்பினும் கடந்த காலாண்டில் 8.2 மில்லியன் பிளே ஸ்டேஷன்கள் மட்டுமே விற்பனையானதால், சோனி நிறுவனம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
இதையடுத்து கடந்த சில மாதங்களாகவே அந்த நிறுவனத்தில் பணி நீக்க நடவடிக்கை இருக்கலாம் என தகவல்கள் வெளியாகி வந்தது. இருப்பினும் ஜப்பான் நிறுவனங்கள் அவ்வளவு எளிதாக ஊழியர்களை வேலை நீக்கம் செய்யாது என்பதால் ஊழியர்கள் சற்றே ஆறுதலில் இருந்தனர்.
இந்த நிலையில் தற்போது மொத்த ஊழியர்களில் 8 சதவீதம் பேரை பணியில் இருந்து விடுவிப்பது என சோனி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது சுமார் 900 பேர் ஆகும். உலகம் முழுவதும் இந்த வேலை இழப்பு நடவடிக்கை இருக்கும் என சோனி நிறுவனம் அறிவித்துள்ளது. குறிப்பாக, லண்டனில் உள்ள அந்நிறுவனத்தின் கிளை முழுமையாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விற்பனை மற்றும் சர்வீஸ் சேவைகள் மட்டுமே தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே இது தொடர்பாக தீவிர ஆலோசனையில் சோனி நிறுவன தலைமை ஈடுபட்டு வந்ததாகவும், நிறுவன பொருட்களின் விற்பனையை அதிகரிக்கவும், நிறுவனத்தை மேம்படுத்தவும் இந்த முடிவு தவிர்க்க முடியாதது எனவும் அந்நிறுவனத்தின் பிளே ஸ்டேஷன் பிரிவு தலைவர் ஜிம் ரயான் ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள இமெயிலில் தெரிவித்துள்ளார். இது சோனி ஊழியர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.