அமெரிக்காவில் வசிக்கும் இந்திய தம்பதி.... வீடியோ கான்பரன்சிங் முறையில் ஆஜராக நீதிமன்றம் அனுமதி!


டெல்லி உயர் நீதிமன்றம்

அமெரிக்காவில் வசிக்கும் இந்திய தம்பதி, தங்கள் திருமணத்தை பதிவு செய்ய பதிவு அலுவலர் முன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராக டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

திருமணம்

டெல்லி, காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி, அங்குள்ள ஒரு ஓட்டலில் இந்து முறைப்படி கடந்த 2022 மே 10-ம் தேதி அன்று திருமணம் செய்து கொண்டுள்ளனர். பின்னர் இத்தம்பதி வேலை நிமித்தமாக அமெரிக்கா சென்றுவிட்டனர்.

இவர்களில் மணமகளானவர், 'எச்1பி' வேலைவாய்ப்பு விசாவில் அங்கு வசித்து வந்த நிலையில், இந்த ஆண்டு ஜனவரியில் பணி நீக்க நடவடிக்கைக்கு உள்ளானார். அமெரிக்காவில் தொடர்ந்து வசிக்க சார்பு விசா பெற வேண்டும். அதற்கு திருமணப்பதிவு சான்றிதழ் தேவை. இத்தம்பதியிடம் திருமணச் சான்றிதழ் இல்லாததால் இணைய வழியில் அதனைப் பெற முயற்சித்துள்ளனர்.

வீடியோ கான்பரன்சிங்

ஆனால் அதற்கு நேரில் ஆஜராக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதால், வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராகி திருமண சான்றிதழைப் பெற உத்தரவிடமாறு மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவுக்கு, டெல்லி அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்த பதிலில், "ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம், மனுதாரர்கள் ஆள்மாறாட்டம் செய்வதற்கான சாத்தியத்தை நிராகரிக்க முடியாது என்றும், இதைத் தவிர்ப்பதற்காக, சம்பந்தப்பட்ட தம்பதியினர், சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் ஆஜராகி அங்கிருந்து வீடியோ கான்பரன்சிங்கில் இணைய உத்தரவிட வேண்டும்" என தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத், அவ்வாறே ஆஜராகுமாறு தம்பதிக்கு உத்தரவிட்டார்.

இதையும் வாசிக்கலாமே...

x