இன்று சர்வதேச சகிப்புத்தன்மை தினம்; சக மனிதனை நேசிப்போம், மனிதத்தன்மையுடன் வாழ்வோம்!


வேறுபாடுகளை காணடிக்கும் சகிப்புத்தன்மை

சகிப்புத்தன்மை வறள்வதின் அடையாளங்கள் உலகின் பல மூலைகளிலும் தற்போது பெருவெடிப்பாக வெளிப்பட்டு வருகிறது. இதன் மத்தியில், சர்வதேச சகிப்புத்தன்மை தினத்தை இன்று (நவ.16) அனுசரிப்பதன் முக்கியத்துவம் இன்னும் அதிகரித்துள்ளது.

அதிலும் இந்தியா போன்ற பன்மைத்துவ தேசத்தின் குடிமக்கள் சகிப்புத்தன்மை தினத்தை அனுசரிப்பது அர்த்தம் உள்ளதாகவும் அமையும். சர்வதேச சகிப்புத்தன்மை தினத்தை ஐக்கிய நாடுகள் அமைப்பு உருவாக்கியதன் பின்னணியிலும் இந்தியாவும், இந்தியர்களும் இருக்கிறார்கள்.

1996-ம் ஆண்டினை சகிப்புத்தன்மைக்கான ஆண்டாக ஐநா கொண்டாடியது. இதன் மூலம் மகாத்மா காந்தியின் 125-வது பிறந்தநாளுக்கு சர்வதேச சமூகத்தின் அஞ்சலியாகவும் ஏற்பாடானது. ஐநா நல்லெண்ண தூதராக இருந்த மதன்ஜீத் சிங் என்பவர் இந்த முன்னெடுப்பின் பின்னிருந்தார். சகிப்புத்தன்மைக்கான கொள்கைகளின் பிரகடனத்தை அதே ஆண்டு நவம்பர் 16-ல் யுனெஸ்கோ வெளியிட்டது.

வேறுபாடுகளின் தொகுப்பான இந்தியா

இதனை அடிப்படையாகக் கொண்டு 1996 முதல் நவம்பர் 16-ம் தேதியை சகிப்புத்தன்மைக்கான சர்வதேச தினமாக அனுசரிக்க, தனது உறுப்பு நாடுகளுக்கு ஐநா அழைப்பு விடுத்தது. சகிப்புத்தன்மை மற்றும் அகிம்சைக்கு தகுதியான நிறுவனங்கள் அல்லது நபர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச சகிப்புத்தன்மை தின அங்கீகாரங்கள் வழங்கவும் முடிவானது.

இந்த பின்னணியில் நின்றே, நாம் இன்று சர்வதேச சகிப்புத்தன்மை தினத்தை கொண்டாட தலைப்படுகிறோம். உலகமே ஒரு கிராமமாக சுருங்கி வரும் காலத்தில், மக்கள் மத்தியிலான வெறுப்புகளும் அதிகரித்தே வருகின்றன. இணையமும், இன்ன பிற நவீன தொழில்நுட்பங்களும் மனிதர்களை பிணைக்க முயன்றாலும், மனதால் சுருங்கிய மனிதன் சகிப்புத்தன்மை இழந்து வெறுப்பின் வேர்களுக்கு நீர் வார்த்து வருகிறான். அதற்கான கெடுபலன்களை தனது சந்ததி நேரடியாக அனுபவிக்கக்கூடும் என்பதை மறந்து, சகிப்புத்தன்மை இழந்து தலைவிரித்தாடுகிறான். இதற்கு நடப்பு சமூக ஊடக களேபரங்களும் ஓர் உதாரணம்.

உலகின் எந்த மூலையில் இருப்பவரையும் நண்பராக்கிக்கொள்ளவும், நேசம் பாராட்டவும் உதவும் இதே இணையவெளியை பயன்படுத்தி, வெறுப்பை வெவ்வேறு வடிவங்களில் கொண்டாடி வருகிறோம். இனம், மொழி, சாதி, மதம், சமூகம், கலாசாரம், நிறம், நிலம் இன்னும் பிறவற்றால் வேறுபட்டிருக்கும் சக மனிதனை சீண்டி வெறுப்பெனும் நெருப்பை வளர்க்கத் துடிக்கிறோம். அதற்கு பல அடிப்படைவாத மற்றும் சுயநல அமைப்புகள், கட்சிகள், இயக்கங்கள் உதவியும் வருகின்றன.

மணிப்பூர் முதல் வேங்கைவயல் வரை இந்த வெறுப்பின் வெவ்வேறான சாயல்களை அடையாளம் காணலாம். இயல்பாகவே வேறுபாடுகளின் தொகுப்பாக இருக்கும் இந்தியா, அதனை தனது தனி அடையாளமாகவும் பெருமிதமாகவும் கொண்டிருக்கிறது. நாட்டின் அத்தகைய தனித்துவ அடையாளங்கள் எல்லாம், வெறுப்பின் ஊற்றுக்கண்களாக மாற்றப்பட்டு வருகின்றன. இவற்றின் மத்தியில் இன்றைய சகிப்புத்தன்மை தினத்தை அர்த்தமுள்ளதாக்க நாம் முயற்சிக்கலாம்.

சர்வதேச சகிப்புத்தன்மை தினம்

சகிப்புத்தன்மைக்கான சர்வதேச தினத்தில், ஒவ்வொருவரும் தம்மைவிட வித்தியாசமான ஒருவரைப் பற்றி இன்னும் கொஞ்சம் அதிகமாகக் கற்றுக்கொள்ள வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ளலாம். நாட்டின் அல்லது உலகின் பிற கலாசாரங்களைப் பற்றி இளம் தலைமுறையினர் கற்றுக்கொள்ளும் பள்ளி நிகழ்ச்சிகள் முதல், வெவ்வேறு பின்னணியில் இருக்கும் இணையவெளி நண்பர்களுடனான ஊடாடல் வரை இவை வேறுபடலாம்.

மனிதர்களின் பின்னணியில் அவர்களின் தனித்துவ அடையாளங்களாக இருப்பவற்றை, ஓர்மையின் பெயரால் மழுங்கடிப்பதற்கு எதிராக மக்கள் குமுறிக் கொண்டிருப்பதன் மத்தியில், இந்தியாவில் சர்வதேச சகிப்புத்தன்மையின் அவசியம் இன்னும் அதிகமாகிறது. மகாத்மாவின் புகழஞ்சலியாக உருவான சகிப்புதன்மையை சர்வதேசங்கள் கொண்டாடும்போது, இந்தியர்களுக்கு சகிப்புத்தன்மை மீதான பொறுப்பு மேலும் கூடவே செய்யும்.

சக மனிதனை நேசிக்கவும், மனிதம் பாராட்டவும், மனிதத்தன்மையுடன் வாழவும் சர்வதேச சகிப்புத்தன்மை தினத்தில் உறுதியேற்போம்!

x