பாகிஸ்தான் வரலாற்றில் முதல் பெண் முதலமைச்சர்.... நவாஸ் ஷெரீப்பின் மகள் நியமனம்!


மரியம் நவாஸ்

பாகிஸ்தான் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக பஞ்சாப் மாகாண முதல் பெண் முதலமைச்சராக நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ் தேர்வாகியுள்ளார்.

முதல்வராக பதவியேற்கும் மரியம் நவாஸ்

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் மொத்தம் 327 தொகுதிகள் உள்ளன. இங்கு இம்மாத துவக்கத்தில் நடந்த தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் - நவாஸ் (பிஎம்எல்என்) கட்சி 137 தொகுதிகளில் வெற்றி பெற்றது. முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவு பெற்ற சன்னி இத்தேஹாத் கவுன்சில் (எஸ்ஐசி) 113 இடங்களில் வெற்றி பெற்றது. இது தவிர சுயேச்சையாக போட்டியிட்டவர்களும் வெற்றி பெற்றனர்.

பஞ்சாப் மாகாணத்தில் ஆட்சி அமைக்க மொத்தம் 187 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இந்நிலையில் பாகிஸ்தான் மக்கள் கட்சி(பிபிபி), பாகிஸ்தான் முஸ்லிம் லீக் -கியூ(பிஎம்எல்-கியூ) மற்றும் 20 சுயேச்சைகள் ஆதரவுடன் பஞ்சாப் மாகாண முதல்வராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகளான 50 வயதான மரியம் நவாஸ் நேற்று தேர்வு செய்யப்பட்டார்.

மரியம் நவாஸ்

இதன் மூலம் பாகிஸ்தான் தேர்தல் வரலாற்றில் முதல் பெண் முதலமைச்சர் என்ற சிறப்பை மரியம் நவாஸ் பெற்றுள்ளார். பதவியேற்ற பின்னர் மரியம் நவாஸ் கூறுகையில், “முதல்வர் பதவியில் சிறப்பாக செயல்படுவதற்கு என் தந்தை எனக்கு பயிற்சி அளித்துள்ளார். இன்று ஒரு பெண் முதலமைச்சரைப் பார்த்து பஞ்சாப் மாகாணத்தின் ஒவ்வொரு பெண்ணும் பெருமைப்படுகிறார்கள். எதிர்க்கட்சியினரை பழிவாங்கும் செயல்களில் நான் ஈடுபடமாட்டேன்" என்றார்.

இதேபோல் பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் பிஎம்எல்(என்) மற்றும் பிபிபி கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க முயன்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

x