இந்தியா - கிரீஸ் இடையே 2030-க்குள் வர்த்தகத்தை இரு மடங்காக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு 4 நாள் அரசுமுறை பயணமாக கிரீஸ் பிரதமர் மிட்சோடாகிஸ் நேற்று இரவு புதுடெல்லி வந்தார். அவருடன் மனைவி மரேவா கிராபோவ்ஸ்கி-மிட்சோடாகிஸ் மற்றும் மூத்த அதிகாரிகள் மற்றும் முக்கிய வர்த்தகக் குழு ஒன்றும் வந்துள்ளது. இந்நிலையில் கிரீஸ் பிரதமருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று பாரம்பரிய முறைப்படி வரவேற்பும், ராணுவ மரியாதையும் அளிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் மற்றும் அவரது மனைவி மரேவா கிராபோவ்ஸ்கி-மிட்சோடாகிஸ் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பிரதமர் நரேந்திர மோடியும், கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிசும் டெல்லியில் இன்று இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். இரு நாடுகளும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தைக்குப் பின்னர், பிரதமர் மோடி கூறுகையில், ‘‘இருதரப்பு வர்த்தகத்தை 2030-ம் ஆண்டுக்குள் இரு மடங்காக உயர்த்த ஒப்புக்கொள்ளப்பட்டது. விவசாயம், மருந்து, மருத்துவ சாதனங்கள், தொழில்நுட்பங்கள், கண்டுபிடிப்புகள், திறன் போன்ற புதிய வாய்ப்புகள், வளர்ச்சி மற்றும் கணினி தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஒத்துழைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. கப்பல் போக்குவரத்து, பாதுகாப்பு, கூட்டு உற்பத்தி போன்றவை இரு நாடுகளுக்கும் பலனளிக்கும்’’ என்றார்.
கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் கூறுகையில், ‘‘அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்திருப்பது பெருமையும் மகிழ்ச்சியும் அளிக்கிறது. இந்தியா - கிரீஸ் நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தப் பயணம் உதவும் கிரீஸ் நாட்டைப் பொறுத்தவரை, இந்தியாவுடனான கூட்டு செயல்பாடு முக்கியத்துவம் வாய்ந்தது.
இரு நாடுகளுக்கு இடையிலான உறவு பழமையும் கலாசார முக்கியத்துவமும் வாய்ந்தது. பிரதமர் மோடி தலைமையிலான குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். இது இரு நாடுகளுக்கும் பலனளிக்கும் வைகையிலும் ஆக்கபூர்வமாகவும் இருந்தது. விவசாயம், சுற்றுலா, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு குறித்தும் வர்த்தகத்தை பெருக்குவது குறித்தும் ஆலோசித்தோம். மேலும் விரிவான ஆலோசனை, அரசியல் ஆலோசனைகள், இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது ஆகியவற்றைப் பற்றி விவாதிக்க இந்த பேச்சுவார்த்தை தூண்டுகோலாக இருக்கும்’’ என்றார்.
உலகின் பொருளாதார, அரசியல் சவால்கள் குறித்து டெல்லியில் நடைபெறும் 9-வது ரைசினா பேச்சுவார்த்தையில் மிட்சோடாகிஸ் தலைமை விருந்தினராகவும், முக்கியப் பேச்சாளராகவும் கலந்து கொள்கிறார்.
இதையும் வாசிக்கலாமே...
பணிகள் நிறைவு... கருணாநிதி நினைவிடத்தை 26-ம் தேதி முதல்வர் திறந்து வைக்கிறார்!