சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் குடியிருப்பு கட்டிடங்கள் மீது இஸ்ரேல் திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
சிரியா தலைநகரான டமாஸ்கசில் உள்ள காஃபர் சவுசா மாவட்டத்தில் இஸ்ரேல் இன்று திடீரென ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் குடியிருப்பு கட்டிடங்கள், பள்ளிகள் மற்றும் ஈரானிய கலாசார மையங்கள் உள்ளன. மேலும், பாதுகாப்பு அமைப்பினர் பயன்படுத்தும் கூடுதல் பாதுகாப்பு கொண்ட ஒரு கட்டிடமும் இப்பகுதியில் அமைந்துள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரியிலும் காஃபர் சவுசா மாவட்டம் இஸ்ரேலின் தாக்குதலுக்குள்ளானது. அப்போது ஈரானிய ராணுவத்தை சேர்ந்த நிபுணர்கள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், தற்போதைய தாக்குதல் குறித்து சிரிய அரசு செய்தி நிறுவனமான சனா வெளியிட்ட தகவலில், இஸ்ரேலிய தாக்குதல் ஒரு குடியிருப்பு கட்டிடத்தை குறிவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்பது குறித்து எந்தத் தகவலும் குறிப்பிடவில்லை. பல மாடி கட்டிடத்தின் சேதமடைந்த புகைப்படத்தையும் சனா வெளியிட்டுள்ளது. இந்நிலையில், காஃபர் சவுசாவில் பலத்த வெடி சப்தம் கேட்டதாகவும், சம்பவ இடத்துக்கு அருகில் உள்ள பள்ளி குழந்தைகள் மிகவும் அச்சமடைந்து அலறியதாகவும் உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர். ஏவுகணை தாக்குதல் நடந்த இடத்துக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்துள்ளன.
இதையும் வாசிக்கலாமே...
பணிகள் நிறைவு... கருணாநிதி நினைவிடத்தை 26-ம் தேதி முதல்வர் திறந்து வைக்கிறார்!