அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸை குடியரசு தலைவர் மாளிகை முன்பு பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார்.
கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் 2 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். மிட்சோடாகிஸுடன் அவரது மனைவி மாரேவா கிரபோவ்ஸ்கி மிட்சோடாகிஸும் வந்துள்ளார். புதுடெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகை முன்பு அவர்களுக்கு இன்று வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, மிட்சோடாகிஸ் தம்பதியை வரவேற்றார்.
அதைத் தொடர்ந்து கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் கூறியதாவது:
“அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்திருப்பது ஒரு பாக்கியம். கிரீஸைப் பொறுத்தவரை, இந்தியாவுடனான கூட்டாண்மை முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் விரிவான ஆலோசனை, அரசியல் ஆலோசனைகள், கூட்டாண்மை ஆகியவற்றைப் பற்றி விவாதிக்க எங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும். இரு நாடுகளிடையேயான பொருளாதார வளர்ச்சிக்கு இந்தப் பயணம் உதவும். பிரதமராக நாங்கள் நடத்தும் விவாதங்களை மிகவும் எதிர்பார்க்கிறேன்"
இவ்வாறு அவர் கூறினார்.
புதுடெல்லியில் இன்று தொடங்கும் மூன்று நாள் 'ரைசினா டைலாக் 2024’ நிகழ்ச்சியில் மிட்சோடாகிஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசுகிறார். அவருடன் கிரீஸ் நாட்டு மூத்த அதிகாரிகள், உயர் அதிகாரம் கொண்ட வணிகக் குழுவும் இந்தியா வந்துள்ளது.
இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடியும், கிரீஸ் பிரதமர் மிட்சோடாகிஸும் இருதரப்பு விவாதங்களை நடத்த உள்ளனர். மேலும், பிரதமர் மோடி, விருந்தினரை உபசரிக்கும் வகையில் வகையில் மிட்சோடாகிஸுக்கு மதிய விருந்து அளிக்க உள்ளார்.