லுப்தான்ஸா நிறுவன விமானிகள் வேலை நிறுத்தம்... சென்னை பயணிகள் கடும் அவதி!


லுப்தான்ஸா நிறுவன ஊழியர்கள் வேலைநிறுத்தம்

லுப்தான்ஸா விமான நிறுவனத்தின் ஊழியர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் விமான பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

ஜெர்மனியைச் சேர்ந்த லுப்தான்ஸா ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், ஜெர்மனியில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் லுப்தான்ஸா விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், சென்னையில் இருந்து அமெரிக்கா, ஜெர்மனி, கனடா, நெதர்லாந்து, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விமான பயணிகள் அவதி

இதேபோன்று கடந்த 2022-ம் ஆண்டும் லுப்தான்சா ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்டனர். இதனால் நூற்றுக்கணக்கான விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டது. தங்களது சம்பளத்தை உயர்த்த வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வரும் இந்த ஊழியர்கள், நிர்வாகம் அதனை ஏற்க மறுத்ததால் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த மாதத்திலேயே இரண்டாவது முறையாக இந்த வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருவதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

சென்னை விமான நிலையம்

லுப்தான்ஸா நிறுவன விமானிகள் மற்றும் ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக, ஐரோப்பிய நாடுகளில் மட்டும் சுமார் 1 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜெர்மனி நாட்டின் 7 விமான நிலையங்களில் இந்த போராட்டம் நடைபெற்று வருவதால் அங்கு விமான சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

x