‘போர் நிறுத்தம் இல்லை’ என்ற நெதன்யாகு அறிவிப்பால் அதிர்ச்சி; ரஃபா நகருக்கு குறிவைத்தது இஸ்ரேல் படை


பிப்.17 அன்று காசாவில் ஹமாஸ் குழுவினரை வேட்டையாடும் இஸ்ரேல் வீரர்கள்

இஸ்ரேல் - காசா இடையே இடைக்கால போர் நிறுத்தத்துக்கான ஆயத்தங்கள் கைகூடி வந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் ’இப்போதைக்கு போர் நிறுத்தம் இல்லை’ என அறிவித்திருப்பது உலக நாடுகளுக்கு ஏமாற்றம் தந்திருக்கிறது.

அக்.7 அன்று இஸ்ரேலில் நுழைந்து சுமார் 1300 உயிர்களை பலி கொண்டது ஹமாஸ் ஆயுதக் குழு. இந்த கோரத் தாக்குதலுக்கு பதிலடி நடவடிக்கையாக, 4 மாதங்களுக்கும் மேலாக காசா மீது இஸ்ரேல் கடும் தாக்குதல் தொடுத்து வருகிறது. ஹமாஸ் ஆயுதக்குழுவை அடியோடு ஒழிப்பது மற்றும் அவர்களால் கடத்தப்பட்ட இஸ்ரேல் பிணைக்கைதிகளை விடுவிப்பது ஆகியவற்றை இலக்காகக் கொண்டு காசா மீதான தாக்குதல் தொடர்ந்து வருகிறது.

சிதிலமான தெற்கு காசா

இந்த தாக்குதலில் இதுவரை 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காசாவில் பலியாகி இருக்கின்றன. இவர்களில் 40 சதவீதத்துக்கும் அதிகமானோர் குழந்தைகள் மற்றும் சிறார் ஆவர். இந்த உக்கிர போரை முடிவுக்கு கொண்டு வருவதன் முதல் படியாக போர் இடை நிறுத்தத்துக்கு கத்தார், எகிப்து போன்ற நாடுகள் ஏற்பாடு செய்தன. அதன்படி பல கட்டங்களாக நடந்தேறிய முதல் சுற்று போர் இடை நிறுத்தத்தில் கணிசமான கைதிகள் பரஸ்பரம் விடுவிக்கப்பட்டனர்.

தற்போது அடுத்த சுற்று போர் நிறுத்தத்துக்கான ஏற்பாடுகளிலும் மத்தியஸ்த நாடுகள் இறங்கின. இதற்கு அமெரிக்காவும் அழுத்தம் கொடுத்தது. அதன்படி 135 நாட்களை உள்ளடக்கிய பல கட்டங்களாகப் பிரிந்த போர் இடை நிறுத்தத்துக்கு ஹமாஸ் முன்வந்தது. இருதரப்பில் கைதிகள் விடுவிப்பு, காசா மக்களுக்கான உதவிகளை ஒருங்கிணைப்பது, காசாவை புனரமைப்பது உள்ளிட்டவை போர் இடை நிறுத்தத்துக்கான ஹமாஸின் நிபந்தனைகளாக இடம் பெற்றிருந்தன.

ஹமாஸ் விடுவித்த இஸ்ரேலிய பிணைக்கைதிகள்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போர் இடை நிறுத்தம், தற்போது இஸ்ரேலின் பிடிவாதத்தால் கேள்விக்குறியாகி இருக்கிறது. சுமார் நான்கரை மாதங்களுக்கு நீடிக்கும் இந்த போர், இடைக்கால அமைதியின் மூலம் முழுமையான போர் நிறுத்தத்துக்கும் வழி செய்யும் என்பது உலக நாடுகளின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் போர் இடை நிறுத்தத்துக்கான ஹாமாஸின் நிபந்தனைகளை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நிராகரித்து விட்டார். மேலும், ‘ஹமாஸ் ஆயுதக் குழுவினரை முற்றிலுமாக அழிக்கும் வரை போர் தொடரும்’ என்று அறிவித்துள்ளார்.

இதனையடுத்து இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் விட்டு வைத்திருந்த முக்கிய நகரான ரஃபாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த முடிவு எட்டப்பட்டுள்ளது. இது காசாவின் இன்னொரு சீரழிவுக்கு வித்திடும் என்பதால் மத்தியஸ்தம் செய்தவைக்கு அப்பாலும் உலக நாடுகள் கவலை கொண்டுள்ளன.

x