யூடியூப் முன்னாள் சி.இ.ஓ., மகன் மர்ம மரணம்... அதிர்ச்சியில் சக மாணவர்கள்


யூடியூப் முன்னாள் சி.இ.ஓ.,வின் மகன் மார்கோ டிராப்பர்

யூடியூப் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியின் மகன், பல்கலைக்கழக வளாகத்தில் உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல வீடியோ இணையதளமான யூடியூப்பின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் சூசன் உசுஜிக்கி. இவரது மகன் மார்கோ டிராப்பர். 19 வயதான மார்கோ அமெரிக்காவின் பெர்க்லி நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கணக்கு பிரிவு பட்டப்படிப்பு பயின்று வந்தார். இந்நிலையில் மார்கோ, பல்கலைக்கழக வளாகத்தில் மயங்கி விழுந்து கிடப்பதாக போலீஸாருக்கு பல்கலைக்கழக நிர்வாகத்தின் சார்பில் தகவல் அளிக்கப்பட்டது.

சூசன் உசுஜிக்கியுடன் மகன் மார்கோ டிராப்பர்

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பெர்க்லி மீட்பு படையினர் மார்கோவிற்கு அவசரகால சிகிச்சை வழங்கியுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் அங்கேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவரது மரணத்திற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை.

யூடியூப் முன்னாள் சி.இ.ஓ., சூசன் உசுஜிக்கி

இருப்பினும் தடை செய்யப்பட்ட போதைப்பொருளை அதிக அளவில் உட்கொண்டதால் அவர் உயிரிழந்திருக்கலாம் என மார்க்கோவின் பாட்டி சந்தேகம் தெரிவித்துள்ளார். அவரது உடலில் இருந்து எடுக்கப்படும் உறுப்புகளை ஆய்வு செய்து, உயிரிழப்பிற்கான காரணம் தெரிய சுமார் 30 நாட்களுக்கு மேல் ஆகும் என்பதால், அதன் பிறகே அவரது மரணத்திற்கான காரணம் தெரிய வரும் என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சமூக வலைதளங்களில், சூசனுக்கு ஆறுதல் தெரிவித்து பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

x