முக்கிய நகரை ரஷ்யாவிடம் இழந்தது உக்ரைன்... படைகளை வாபஸ் பெறுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!


அவ்டிவ்கா நகரில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த உக்ரைன் படைகள்

கிழக்கு உக்ரைனின் அவிடிவ்கா நகரில் இருந்து படைகளை வெளியேற்றுவதாக அந்நாட்டு ராணுவ தளபதி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போரை துவங்கியது. சில மாதங்கள் மட்டுமே நீடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த போரில், உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ கூட்டமைப்பு நாடுகள் தொழில்நுட்ப ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், ஆயுத ரீதியாகவும் தொடர்ந்து உதவி செய்ததால் போர் சுமார் இரண்டு ஆண்டுகளாக நீண்டு கொண்டே வருகிறது. வருகிற 24ம் தேதி இந்த போர் துவங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், ரஷ்யா நடத்தி வரும் போர் முடிவுக்கு வராமல் தொடர்ந்து வருகிறது.

உருக்குலைந்துள்ள அவ்டிவ்கா நகரம்

தற்போது வரை உக்ரைனின் முக்கிய நகரங்களை நெருங்க முடியாதவாறு உக்ரைன் படைகள் ரஷ்யப்படைகளை தொடர்ந்து எதிர்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அவ்வப்போது சில நகரங்களை இழக்க வேண்டிய நிலைக்கு உக்ரைன் தள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் கிழக்கு உக்ரைனில் அவ்டிவ்கா நகரை கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக ரஷ்யப்படைகள் முற்றுகையிட்டு இருந்தன. இந்த நான்கு மாதங்களாக தொடர்ந்து அந்நகரில் போர் நடைபெற்று வந்த போதும், ரஷ்யப்படைகளால் முழுமையாக உக்ரைன் படைகளை வெல்ல முடியவில்லை.

படைவீரர்களின் நலன் கருதி வாபஸ் முடிவு என அறிவிப்பு

ஆனால் கடந்த சில நாட்களாக நிலைமை அங்கு மோசம் அடைந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தது. குறிப்பாக போதுமான ஆயுதங்கள், உணவு உள்ளிட்டவை இன்றி உக்ரைன் படைகள் கடும் சிரமத்தை சந்தித்து வந்தன. இந்த நிலையில் மேலும் உயிரிழப்புகளை தவிர்க்கும் விதமாக அந்நகரத்திலிருந்து உக்ரைன் படைகளை வாபஸ் பெறுவதாக அந்நாட்டு ராணுவ தளபதி ஒலெக்சாண்டர் சிர்ஸ்கி அறிவித்துள்ளார்.

கடந்த நான்கு மாதங்களாக தொடர்ந்து ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து வந்ததாகவும், தற்போது நாட்டை பாதுகாக்கும் வீரர்களின் நலனுக்காக அவ்டிவ்கா நகரில் இருந்து வெளியேறுவதாகவும் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளார். இதனிடையே ரஷ்யாவில் வருகிற மார்ச் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த வெற்றி ரஷ்யாவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

x