சொத்து மதிப்பை அதிகம் காட்டி முதலீட்டை ஈர்த்த டிரம்ப்... அமெரிக்க நீதிமன்றம் அளித்த பரபரப்பு தீர்ப்பு!


அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்

சொத்துக்களை மிகைப்படுத்தி காட்டி முதலீடுகளை ஈர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமெரிக்க நீதிமன்றம், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு 354.9 மில்லியன் டாலர்கள் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

அமெரிக்காவின் முன்னாள் அதிபராக பதவி வகித்த டொனால்ட் டிரம்ப் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. தேர்தல் காலத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டது மற்றும் பதவிக்காலத்தின் போது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக அவர் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், டொனால்ட் டிரம்ப் கடந்த 2013ம் ஆண்டு தனது ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக தனது சொத்து மதிப்பை 3.6 பில்லியன் டாலர்கள் என விளம்பரப்படுத்தியுள்ளார்.

நீதிமன்றத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்

இதன் மூலம் அவர் பல மில்லியன் டாலர் முதலீட்டை ஈர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் இது மிகைப்படுத்தப்பட்ட மதிப்பீடு எனவும், இதன் மூலம் அவர் பல மில்லியன் டாலர்கள் வரி முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு, வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான பல்வேறு வழக்குகளில் கடந்த 2022ம் ஆண்டு ட்ரம்ப் ஆர்கனைசேஷன் மீது நிதி முறைகேடு வழக்கில் தவறிழைத்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

நீதிமன்றத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்

இந்த நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ள நியூயார்க் நீதிமன்றம், டொனால்ட் டிரம்பிற்கு 354.9 மில்லியன் டாலர்கள் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், டொனால்ட் டிரம்ப், நியூயார்க் நகரில் உள்ள எந்த நிறுவனத்திலும் தலைவராகவோ இயக்குனராகவோ இயங்குவதற்கும் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப போட்டியிட முனைப்பு காட்டி வரும் நிலையில், இந்த தீர்ப்பு அவருக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. இருப்பினும் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக டிரம்ப் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...


‘ஜோக்கர் இப்போ ஹீரோவானேன்...’ நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் ஸ்பெஷல்!

x