அமெரிக்காவில் ரக்பி போட்டியின் கொண்டாட்ட நிகழ்வில் பங்கேற்றவர்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார். 21 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் துப்பாக்கிகள் வாங்க எளிமையான நடவடிக்கைகளே உள்ளதாலும், அதிகரித்து வரும் மன அழுத்தம் காரணமாகவும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனால் அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பது வாடிக்கையான நிகழ்வாகி வருகிறது.
இந்த நிலையில், அமெரிக்காவின் கன்சாஸ் சிட்டி நகரில், சூப்பர் பவுல் ரக்பி போட்டிகள் நடைபெற்றது. இதில் கன்சாஸ் சிட்டி சீவ்ஸ் அணி வெற்றி பெற்றது. இதையடுத்து இந்த வெற்றியை கொண்டாடுவதற்காக அந்த அணியின் ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் மைதானத்தின் அருகே கூடினர். அப்போது திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதால் ரசிகர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். இதனிடையே 3 மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். 21க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
21 பேரில் 7 பேரின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரையும் கைது செய்திருப்பதாகவும், அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேல் விசாரணைகள் நடைபெற்று வருவதால் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் யார் என்பது குறித்த தகவல்களை வெளியிட முடியாது என போலீஸார் தெரிவித்துள்ளனர். இதனிடையே, உயிரிழந்த பெண் யார் என்பது தெரிய வந்துள்ளது. அவர் உள்ளூர் வானொலியில் பணியாற்றி வந்த லிசா லோபஸ் என்பதும், அவர் பிரபல நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வந்ததும் தெரியவந்துள்ளது.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொதுமக்களின் கோபம் போலீஸார் மீது திரும்பி உள்ளது. இதுபோன்று ஆயிரக்கணக்கானோர் கூடக்கூடிய இடத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது போலீஸாரின் கடமை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். துப்பாக்கியுடன் நுழையும் அளவுக்கு பாதுகாப்பு மிகவும் பலவீனமாக இருந்தது அதிர்ச்சி அளிப்பதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.