அபுதாபியில் முதல் இந்து கோயிலை மோடி இன்று திறக்கிறார்...என்னென்ன சிறப்பு அம்சங்கள்?


அபுதாபி இந்து கோயில்

அபுதாபியில் பிஏபிஎஸ் சங்கத்தால் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட இந்து கோயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்துவைக்க உள்ளார்.

முகமது பின் சையத், பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் நாடுகளுக்கு இரண்டு நாள் அரசு முறை பயணமாக நேற்று புறப்பட்டு சென்றார். முதலில் ஐக்கிய அரபு அமீரகம் சென்ற பிரதமர் மோடியை அபுதாபியில், அந்நாட்டு அதிபர் முகமது பின் சையத் நேரில் வரவேற்றார்.

பின்னர், இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்நிலையில் 2வது நாளான இன்று அபுதாபியில் பிஏபிஎஸ் சங்கத்தால் கட்டப்பட்ட முதல் இந்து கோயிலை திறந்து வைக்க உள்ளார்.

இக்கோயில் 27 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ளது. கற் கோயிலாக கட்டப்பட்டுள்ள, இக்கோயில் இந்திய கலாசாரம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் அடையாளம் ஆகியவற்றின் கலவையாக இருக்கும்.

துபாய்-அபுதாபி ஷேக் சயீத் நெடுஞ்சாலையில் அல் ரஹ்பாவுக்கு அருகிலுள்ள அபு முரைகாவில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. இதற்கு அடிக்கல் நாட்டும் விழா, கடந்த 2019-ம் ஆண்டில் நடைபெற்றது.

மிகவும் விஸ்தீரணமாக அமைந்துள்ள இக்கோயிலில் 3 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் ஒரு பிரார்த்தனை மண்டபம் மற்றும் சமூக மையம், கண்காட்சி மண்டபம், நூலகம், குழந்தைகள் பூங்கா ஆகியவற்றை கொண்டுள்ளது.

கோயில் கோபுரங்கள்

கோயிலின் முகப்பில் இளஞ்சிவப்பு மணற்கல் பின்னணியில் அமைக்கப்பட்ட நேர்த்தியான பளிங்கு சிற்பங்கள் உள்ளன. அவை ராஜஸ்தான் மற்றும் குஜராத்தைச் சேர்ந்த திறமையான கைவினைஞர்களால் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கற்களால் வடிவமைக்கப்பட்டுள்ளன. இளஞ்சிவப்பு மணற்கல் ராஜஸ்தானில் இருந்து கொண்டு செல்லப்பட்டது.

கோயிலில் இடம்பெற்றுள்ள சிற்பங்கள்

இக்கோயில் பாரம்பரிய நாகர் பாணி கட்டிடக்கலையைக் கொண்டு. இதன் உயரம் 108 அடி. கோயில் இடத்தில் பண்டைய நாகரிகங்களான மாயா, ஆஸ்டெக், எகிப்திய, அரபு, ஐரோப்பிய, சீன மற்றும் ஆப்பிரிக்க கதைகளை பிரதிபலிக்கும் கலையம்சங்கள் கல்லில் வடிக்கப்பட்டுள்ளன. ராமாயண கதைகளும் இந்த கட்டமைப்பில் காணப்படுகின்றன.

இக்கோயிலில் 7 சந்நிதிகள் உள்ளன. ஒவ்வொன்றும் இந்தியாவின் வடக்கு, கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளைச் சேர்ந்த வெவ்வேறு தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

x