‘கத்தாரில் முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் மீட்பு நடவடிக்கை முழுக்கவும் பிரதமர் மோடி மேற்பார்வையில் நடந்தது’


பிரதமர் மோடி மற்றும் மீட்பு நடவடிக்கை

‘கத்தாரில் முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் மீட்பு நடவடிக்கை முழுக்கவும் பிரதமர் மோடி மேற்பார்வையில் நடந்தது’ என இந்திய வெளியுறவுச் செயலர் வினய் மோகன் குவாத்ரா பெருமிதம் தெரிவித்துள்ளார்.

’கத்தார் நாட்டு சிறையிலிருந்து இந்தியாவின் முன்னாள் கடற்படை வீரர்கள் விடுவிக்கப்பட்ட விவகாரத்தில், இந்திய பிரதமர் மோடி நேரடியாக மேற்பார்வையிட்டார்’ என வெளியுறவுத் துறை செயலர் வினய் மோகன் குவாத்ரா தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் நெருக்கத்தில் மோடியின் சாதனைகளில் ஒன்றாக, இந்த இந்திய பிரஜைகள் மீட்கப்பட்டதும் நாடு திரும்பிய விவகாரமும் சேர்ந்திருக்கிறது.

கத்தாரிலிருந்து இந்தியா திரும்பியவர்கள்

கத்தாரின் அல் தஹ்ரா என்ற நிறுவனத்தின் ஊழியர்களாக இந்தியாவின் முன்னாள் கடற்படை வீரர்களான 8 பேர் பணியாற்றி வந்தனர். இஸ்ரேலின் மொசாட் உளவு நிறுவனத்துக்காக, கத்தாரின் நீர்மூழ்கி உள்ளிட்டவற்றை உளவு பார்த்ததாக இந்த 8 பேரும் குற்றச்சாட்டுக்கு ஆளானார்கள். கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இவர்களுக்கு எதிரான வழக்கில் கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இந்தியாவில் கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில், இந்திய அரசு சார்பில் உயர்மட்ட பேச்சு வார்த்தை மற்றும் ராஜீய நடவடிக்கைகள் தொடங்கின.

அவற்றின் விளைவாக முன்னாள் கடற்படைவீரர்கள் தாக்கல் செய்த மேல்முறையீடுகள் நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அவர்கள் மரண தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டு சிறைச்சாலைக்கு தண்டனை இறக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. எனினும் பிரதமர் மோடி தலைமையிலான தனிப்பட்ட அழுத்தம் காரணமாக, கத்தாரின் பிடி தளர்ந்துள்ளது. சிறையிலிருந்த 8 முன்னாள் வீரர்களும் விடுவிக்கப்பட்டதோடு, அவர்களில் 7 பேர் இன்று இந்தியா திரும்பினார்கள்.

இது தொடர்பாக இந்திய வெளியுறவுச் செயலர் வினய் மோகன் குவாத்ரா, கத்தார் அரசாங்கத்திற்கும் அதன் எமிர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானிக்கும் நன்றி தெரிவித்தார். அதனைத் தொடர்ந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசிய குவாத்ரா, ’பிரதமர் நரேந்திர மோடி இந்த வழக்கின் அனைத்து முன்னேற்றங்களையும் தனிப்பட்ட முறையில் தொடர்ந்து மேற்பார்வையிட்டார்’ என்று கூறினார். “அவர்கள் திரும்பியதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். கத்தார் அரசாங்கம் மற்றும் அமீர் அவர்களை விடுவிக்க எடுத்த முடிவை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம்" என்று குவாத்ரா கூறினார்.

கத்தார் மற்றும் இந்திய தலைவர்கள் இடையிலான இணக்கம்

இதனிடையே ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு, பிப்ரவரி 14 அன்று பிரதமர் மோடி கத்தாரின் தோஹா செல்கிறார். “இந்தப் பயணத்தின் போது, ​​பிரதமர் மோடி கத்தார் எமிர் மற்றும் நாட்டின் பிற உயர்மட்டப் பிரமுகர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார். இது கத்தாருக்கு பிரதமரின் இரண்டாவது விஜயமாகும். இந்தியாவிற்கும் கத்தாருக்கும் இடையிலான வலுவான இருதரப்பு வர்த்தகம் தற்போது 20 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது” என்று அவர் மேலும் கூறினார்.

கத்தாரில் சுமார் 8.4 லட்சம் இந்தியர்கள் வசித்து வருவதன் மத்தியில், அவர்களில் சுமார் 700 இந்தியர்கள் பல்வேறு வழக்குகளில் கைதாகி கடுங்காவல் உள்ளிட்ட தண்டனைகளுக்கு ஆளாகி வருகின்றனர். அவர்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இந்தியர்கள் விடுவிக்கப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பும் பிரதமர் மோடியின் பிப்.14 கத்தார் விஜயத்தை ஒட்டி எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

ஆளுநருக்கு அப்பாவு கொடுத்த பதிலடி... தமிழக சட்டமன்றத்தில் பரபரப்பு!

'வேலை கிடைக்கவில்லை; ஆனாலும் மக்களின் பாக்கெட்டுகள் கொள்ளையடிக்கப்படுகிறது' - மத்திய அரசு மீது ராகுல் தாக்கு

x