ஒரிஜினல் ஜாக்பாட்... குழந்தைகளின் பிறந்தநாள் எண்ணில் வாங்கிய லாட்டரிக்கு ரூ.33 கோடி பரிசு!


ரூ.33 கோடி ஜாக்பாட் வென்ற ராஜீவ் அரிக்கட்

ஐக்கிய அரபு அமீரக நாட்டில் வசித்து வரும் இந்தியர் ஒருவருக்கு லாட்டரியில் 33 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் லாட்டரி விற்பனை தொடர்ந்து இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனைக்குத் தடை செய்யப்பட்டுள்ள போதும், அண்டை மாநிலமான கேரளாவில் அரசே லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இதனிடையே வெளிநாடுகளுக்கு வேலைக்காக செல்லும் இந்தியர்கள் அவ்வப்போது கோடிக்கணக்கில் லாட்டரிகளை வென்று வருகின்றனர். அந்த வகையில் இந்தியர் ஒருவருக்கு வளைகுடா நாட்டில் 33 கோடி ரூபாய் அளவிற்கு ஜாக்பாட் பரிசு விழுந்துள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

லாட்டரி

கேரள மாநிலத்தைச் சேர்ந்த ராஜீவ் அரிக்கட் என்பவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் அல் ஐன் நகரத்தில் கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றி வரும் அவர், அவ்வப்போது அங்கு நடைபெறும் லாட்டரி குலுக்கல்களில் கலந்து கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த வாரம் தனது 8 மற்றும் 5 வயதுடைய இரு குழந்தைகளின் பிறந்த நாட்களின் எண்களில் லாட்டரி ஒன்றை வாங்கி இருந்தார். அதன் குலுக்கல் இன்று நடைபெற்ற நிலையில், அவருக்கு முதல் பரிசாக 15 மில்லியன் திர்ராம்கள் பரிசுத்தொகை விழுந்துள்ளது. இது இந்திய மதிப்பில் 33 கோடி ரூபாய் ஆகும்.

ஒரே நாளில் திடீரென கோடீஸ்வரன் ஆகியுள்ள ராஜீவ் தற்போது உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளார். இருப்பினும் இந்த பணத்தை என்ன செய்வது என இதுவரை முடிவு செய்யவில்லை என தெரிவித்துள்ள அவர், இந்த பணத்தின் ஒரு பகுதியை தனது உற்ற நண்பர்கள் 19 பேருடன் பகிர்ந்து கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார். தனது குழந்தைகளின் பிறந்த நாட்கள் கொண்ட எண்ணில் ஜாக்பாட் கிடைத்திருப்பது தனக்கு மேலும் மகிழ்ச்சியை அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

x