இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கான விசா நடைமுறை இல்லாத வரவேற்பை, வளைகுடா தேசங்களில் ஒன்றான ஈரான் இன்று விடுத்துள்ளது.
ஈரானுக்குச் செல்லத் திட்டமிடும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கான விசா இல்லாத கொள்கையை ஈரான் அறிவித்துள்ளது. இது தொடர்பாக டெல்லியில் உள்ள ஈரான் தூதரகம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், அது சார்ந்த நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளை விளக்கி உள்ளது. இதன்படி சுற்றுலா நோக்கங்களுக்கான இந்தியர்களின் விசா இல்லாத நுழைவு, பிப்ரவரி 4 முதல் அமலுக்கு வந்துள்ளது.
இவ்வாறு விசா இன்றி ஈரானுக்குள் செல்லும் இந்தியர்கள் அதிகபட்சமாக 15 நாட்கள் வரை அங்கே தங்குவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். அதாவது சாதாரண பாஸ்போர்ட் வைத்திருக்கும் இந்தியர்கள், 6 மாதங்களுக்கு ஒரு முறை இவ்வாறு விசா இன்றி ஈரானுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். இந்த சலுகையின் கீழான சுற்றுலாவாசிகளுக்கு ,15 நாட்களுக்கு மேல் கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது.
இந்த விசா ரத்து ஏற்பாடானது, சுற்றுலா நோக்கங்களுக்காக ஈரானுக்கு செல்லும் இந்தியர்களுக்கு மட்டுமே பொருந்தும். அதாவது வணிகம், மருத்துவம் அல்லது கல்வி நோக்கங்களுக்காக ஈரானுக்குச் செல்ல வேண்டிய இந்தியர்கள் அந்தந்த பிரிவுகளின் கீழ் விசாவிற்கு விண்ணப்பித்தாக வேண்டும்.
அதே போன்று சுற்றுலா நிமித்தம் ஈரானுக்கு பயணப்படும் இந்தியர்கள், ஆறு மாத காலக்கெடுவுக்குள் மீண்டும் பயணிக்க வேண்டியிருப்பின், முறைப்படி விசா பெற விண்ணப்பம் செய்தாக வேண்டும். மேலும் விமானம் மார்க்கமாக ஈரானுக்கு செல்லும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமே இந்த விசா இல்லாத கொள்கை பொருந்தும். அதாவது, துருக்கி, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகள் வாயிலாக சாலை மார்க்கம் ஈரானுக்கு வருவோர் விசாவை முன்கூட்டியே பெறுவது அவசியமாகிறது.
ஈரான் தூதரகம் இந்த விவரங்களை வெளியிட்டுள்ளது.