2014-ம் ஆண்டு முதல் தற்போது வரை 344 புராதான கலைப்பொருட்கள் இந்தியாவுக்குத் திரும்பியுள்ளன என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
’2004 முதல் 2013 வரையிலான ஆண்டுகளில் ஒரே ஒரு புராதானப் பொருள் மட்டுமே இந்தியாவுக்குத் திருப்பியுள்ளது. ஆனால் 2014-ம் ஆண்டு முதல் 2023 வரை மொத்தம் 344 பழங்காலப் பொருட்கள், மற்ற நாடுகளில் இருந்து இந்தியாவுக்குத் திரும்பியுள்ளன’ என மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்தார்.
இந்தியாவின் தொன்மையான கலாச்சாரம், நாகரீகம், கலை வளம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் புராதானப் பொருட்கள், அதிகளவில் வெளிநாடுகளுக்கு கொள்ளை போயுள்ளன. ஆங்கிலேய ஏகாதிபத்திய காலத்தில் இந்தியாவின் பெரும் சொத்துக்கள் அதிகாரபூர்வமாக இங்கிருந்து களவாடப்பட்டன.
இவற்றுக்கு அப்பால் சுதந்திர இந்தியாவில் திட்டமிட்டு கொள்ளையடிக்கப்பட்டு, சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட புராதானப் பொருட்கள் ஏராளம். கோயில் சிலைகள் உட்பட பெரும் பொக்கிஷங்கள் இவ்வாறு கடத்தப்பட்டன.
தேசத்தின் பெருமிதத்துக்கு உரிய இந்த புராதான பொருட்களை மீட்கும் நடவடிக்கைகள் நீண்ட காலமாக நடைபெற்று வந்தபோதும், பிரதமராக மோடி பதவியேற்ற பின்னர் அவை புதுவேகம் பிடித்தன. ஆட்சியாளர்கள் தனி அக்கறை காட்டினால் எந்த ஒன்றிலும் திடமாக சாதனை நிகழ்த்த முடியும் என்பதற்கு, இந்த மீட்பு நடவடிக்கைகளும் உதாரணமாகி இருக்கின்றன.
கலாச்சாரத் துறை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி மக்களவையில் நேற்று ஒரு கேள்விக்கு பதில் அளிக்கையில், “1976 முதல் 2023 வரையிலான காலத்தில் 357 தொல்பொருட்கள் இந்திய தொல்லியல் துறையால் மீட்கப்பட்டுள்ளது. அதில் 344 தொல்பொருட்கள் 2014-ம் ஆண்டுக்குப் பின்னர் மீட்கப்பட்டவை” என தெரிவித்துள்ளார். அதாவது கடந்த சுமார் அரை நூற்றாண்டு காலத்தில் மீட்கப்பட்ட புராதனப் பொருட்களில் 96% மோடி ஆட்சி காலத்தில் அரங்கேறி இருக்கின்றன.
2023-ம் ஆண்டில் மட்டும் மொத்தம் 115 புராதானப் பொருட்கள் இந்தியாவுக்குத் திருப்பித் தரப்பட்டுள்ளன. அதே போன்று கடந்த 5 ஆண்டுகளில் 314 பழங்கால பொருட்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் அமெரிக்காவில் இருந்து 262 , இங்கிலாந்தில் இருந்து 15, ஆஸ்திரேலியாவில் இருந்து 35 மற்றும் இத்தாலியில் இருந்து ஒன்று என புராதான கலைப்பொருட்கள் அதே காலகட்டத்தில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
இதையும் வாசிக்கலாமே...
ஸ்ரீதேவி மரணத்தில் மர்மம்... பிரதமர் பெயரில் போலி கடிதம் தயாரித்த இளம்பெண்!