'கிராமி' விருது பெற்ற சக்தி இசைக்குழுவுக்குக் குவியும் பாராட்டுகள்!


இந்திய இசைக் கலைஞர்களுக்கு கிராமி விருது

இந்திய இசைக்கலைஞர்கள் சங்கர் மகோதேவன், ஜாகிர் உசேன் உள்ளிட்டோர் உருவாக்கிய 'சக்தி' இசை ஆல்பத்துக்கு அமெரிக்காவின் கிராமி விருது வழங்கப்பட்டுள்ளது. இக்குழுவிற்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் 66வது வருடாந்திர கிராமி விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

இதில் 'திஸ் மொமெண்ட்'- இசை ஆல்பத்தில் இடம்பெற்றுள்ள சக்தி இசைக்குழுவின் பாடல்களுக்கு சிறந்த உலகளாவிய இசை ஆல்பத்துக்கான விருது கிடைத்துள்ளது.

இந்த இசைக்குழுவில் சங்கர் மகாதேவன்,உஸ்தாத் ஜாகீர் உசேன், கணேஷ் ராஜகோபாலன், செல்வகணேஷ் விநாயக்ராம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சங்கர் மகாதேவன், செல்வ கணேஷ் விநாயக்ராம், கணேஷ் ராஜகோபாலன்

லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற இசைக்கலைஞரும், கிராமி வெற்றியாளருமான ரிக்கி கேஜ் இது தொடர்பான செய்தியை எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ 'சக்தி'-க்கு 2024 கிராமி விருது. இந்த ஆல்பத்தின் மூலம் 4 அற்புதமான இந்திய இசைக்கலைஞர்கள் கிராமி விருதுகளை வென்றனர்! வியப்பாக இருக்கிறது. இந்தியா ஒவ்வொரு திசையிலும் பிரகாசித்து வருகிறது. சங்கர் மகாதேவன், செல்வகணேஷ் விநாயக்ராம், கணேஷ் ராஜகோபாலன், ஜாகீர் உசேன். திறமையான புல்லாங்குழல் கலைஞர் ராகேஷ் சவுரசியாவுடன் இணைந்து ஜாகீர் உசேன் இரண்டாவது கிராமி விருதை வென்றார். பிரமாதம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

விருது வென்ற இந்திய இசைக்கலைஞர்களுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

x