இந்தியாவின் யுபிஐ பிரான்ஸிலும் இனி செல்லுபடியாகும்... கட்டணங்களை செல்போனிலேயே செலுத்தலாம்!


பாரீஸ்

இந்தியாவின் யுபிஐ சேவை உலகிற்கே முன் மாதிரியாக இருந்துவரும் நிலையில் அதை தற்போது பிரான்ஸ் நாடும் ஏற்றுக் கொண்டுள்ளது. இனி பிரான்ஸிலும் யுபிஐ பயன்படுத்தலாம்.

யு பி ஐ

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் பிரான்ஸுக்கு சென்றிருந்தார். அப்போது விரைவில் யுபிஐ பரிமாற்ற செயல்முறை பிரான்ஸிலும் ஏற்கப்படும். அது புகழ்பெற்ற ஈஃபிள் டவரில் இருந்து தொடங்கும் என இந்தியர்கள் மத்தியில் உரையாடும் போது குறிப்பிட்டார். அது தற்போது நிறைவேறியுள்ளது.

பாரீஸில் உள்ள இந்திய தூதரகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனம் (NPCI), பிரான்ஸின் பரிவர்த்தனைகள் அமைப்பும் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டன. இதன்படி, இனி பிரான்ஸ் நாட்டில் யுபிஐ பயன்படுத்தி பணம் செலுத்த இயலும்.

அதாவது பிரான்ஸ் செல்லும் இந்தியர்கள் யுபிஐ வாயிலாக பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். முதன்முறையாக இந்தியாவின் யுபிஐ பரிவர்த்தனையை ஏற்கும் ஐரோப்பிய நாடாக பிரான்ஸ் மாறியுள்ளது.

இந்தியர்கள் இனி ஈஃபிள் டவரை பார்க்க வேண்டுமெனில் முன் கூட்டியே யுபிஐ மூலம் பணம் செலுத்தி ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்து கொள்ளலாம். பிரான்ஸில் யுபிஐ பரிவர்த்தனையை ஏற்கும் முதல் அமைப்பு ஈஃபிள் டவர் நிர்வாகம் என தெரிவித்துள்ள என்பிசிஐ, விரைவில் பிரான்ஸின் அனைத்து சுற்றுலா தலங்களிலும் இது விரிவாக்கப்படும் என கூறியுள்ளது.

யுபிஐ பரிவர்த்தனையை அனைத்து நாடுகளும் ஏற்றுக் கொள்ளும் வகையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் என்பிசிஐ தெரிவித்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய பணப் பரிமாற்ற முறையாக யுபிஐ மாறும் என்றும், இதற்காக அனைத்து நிதி நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளது.

கடந்த ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, கனடா, ஹாங்காங், ஓமன், கத்தார், அமெரிக்கா, சவுதி அரேபியா, பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் இருக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் , இந்தியாவில் வைத்திருக்கும் வங்கிக் கணக்கு மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டிருந்தால் யுபிஐ மூலம் பணம் அனுப்பலாம் மற்றும் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

பிப்.12-ம் தேதி பட்ஜெட் கூட்டம்... ஆளுநர் ரவிக்கு சபாநாயகர் நேரில் அழைப்பு!

நடிகர் விஜய் தொடங்கிய கட்சியால் திமுகவுக்குப் பாதிப்பா?: கனிமொழி எம்.பி பேட்டி

x