ஸ்பெயினில் பேரறிஞர் அண்ணாவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை!


அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின்

பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி அவரது திருவுருப்படத்திற்கு ஸ்பெயினில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினர்

திமுகவினர் பேரணி

தமிழக முன்னாள் முதல்வரும், திமுகவின் முதல் பொதுச்செயலாளருமான பேரறிஞர் அண்ணா அவர்களின் 55வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு தமிழக முதல்வர் முக ஸ்டாலின், திமுகவினர் அனைவரும் அமைதிப்பேரணி நடத்தி அஞ்சலி செலுத்த வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய அமைச்சர்கள், திமுக தலைவர்கள்

இதையடுத்து, சென்னை விருந்தினர் மாளிகையில் இருந்து திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன், கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி மற்றும் இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அமைதிப் பேரணியாகச் சென்றனர்.

இதையடுத்து, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலில் துரைமுருகன் மலர் தூவி அஞ்சலி செலுத்த, தொடர்ந்து மற்ற தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். இதில் திரளான கட்சித் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

ஸ்பெயினில் அஞ்சலி செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்

இந்நிலையில், தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்க ஸ்பெயின் சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்ணா உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். அவருடன் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா,முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

இதுதொடர்பாக, முதல்வர் ஸ்டாலின், தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் அஞ்சலிக் குறிப்பு ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், "தமிழ்த்தாயின் தலைமகனாகப் பிறந்து, நமக்கெல்லாம் அண்ணனாக - அறிவு மன்னனாக வழிகாட்டிய பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நினைவுநாள்! இன்று அமைதிப் பேரணியாகச் சென்ற கழக உடன்பிறப்புகள், பேரறிஞர் அண்ணா சொன்ன கடமை - கண்ணியம் - கட்டுப்பாட்டோடு உழைத்து மாநில சுயாட்சியை வென்றெடுக்கும் மக்களுக்கான அரசு ஒன்றியத்தில் அமைய ஓய்வின்றி உழைக்க வேண்டும்! எண்ணித் துணிக கருமம்!" என பதிவிட்டுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

பிப்.12-ம் தேதி பட்ஜெட் கூட்டம்... ஆளுநர் ரவிக்கு சபாநாயகர் நேரில் அழைப்பு!

x