‘சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வயதாகிவிட்டது’ 2027க்குள் விண்வெளியில் தனி நிலையம் திறக்க ரஷ்யா உறுதி!


சர்வதேச விண்வெளி நிலையம்

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வயதாகிவிட்டதால், 2027க்குள் தனி விண்வெளி நிலையம் திறக்க ரஷ்யா உறுதி பூண்டுள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு தற்போது 25 வயதாகிறது. இதில் 2028 வரை இணைந்திருக்க ரஷ்யா திட்டமிட்டிருந்தது. ஆனால், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வயதாகிவிட்டதாலும், விண்வெளி ஆய்வுக்கான தொழில்நுட்ப வளங்களை அது இழந்துவிட்டதாலும், அங்கிருந்து வெளியேற ரஷ்யா முடிவு செய்துள்ளது.

ரஷ்ய விண்வெளி ஆயத்தங்களை பார்வையிடும் அதிபர் புதின்

இதனையடுத்து, விண்வெளியில் ரஷ்யாவுக்கு என தனி விண்வெளி நிலையத்தை உருவாக்கும் பணிகளை விரைவுபடுத்துமாறு ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கையை அடுத்து, பூமியில் பெருவாரி உலக நாடுகளுடனான உறவில் ரஷ்யா விரிசல் கண்டது. இந்த வரிசையில் பூமிக்கு வெளியே விண்வெளியிலும், சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து வெளியேறி தனி விண்வெளி நிலையத்தை ரஷ்யா உருவாக்குகிறது.

விண்வெளி நிலையம் மட்டுமன்றி மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இதர ஆய்வுப் பணிகளையும் விரைவுபடுத்துமாறு புதின் உத்தரவிட்டுள்ளதாக, ரஷ்ய விண்வெளி முகமையான ரோஸ்கோஸ்மோஸின் தலைவர் யூரி போரிசோவ் தெரிவித்துள்ளார். ஆகஸ்டில் சந்திரனை ஆராய்வதற்காக அதன் தென்துருவத்தை நோக்கி ரஷ்யா ஏவிய லூனா-25, கடைசிநேர தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக தோல்வியுற்றது.

விண்வெளி நிலையம்

அதே நேரத்தில் இந்தியாவின் சந்திரயான்-3 திட்டம் வெற்றிகரமானது. இதனை அவமானகரமாக கருதிய ரோஸ்கோஸ்மோஸ் நிலவுக்கான அடுத்து சுற்று விண்வெளித் திட்டப்பணிகளை விரைவுபடுத்தியது. இந்த வகையில் திட்டமிட்ட 2027க்கு ஓராண்டு முன்னதாகவே நிலவுக்கான அடுத்த விண்கலத்தை ரஷ்யா ஏவ உள்ளதை போரிசேவ் உறுதி செய்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

x