3,500 ஊழியர்கள் பணி நீக்கம்... தனியார் வங்கி அதிரடி நடவடிக்கை


டாய்ச் வங்கி

லாபத்தில் அடிவாங்கியது மற்றும் நிர்வாக சீரமைப்பு நடவடிக்கையின் பெயரில், பிரபல பன்னாட்டு வங்கியான டாய்ச் வங்கி தனது ஊழியர்களில் 3,500 பேரை பணி நீக்கம் செய்கிறது.

ஜெர்மனியை பின்புலமாக கொண்ட டாய்ச் வங்கி, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் கிளைகள் விரித்து பரவியுள்ளது. பன்னாட்டு வர்த்தகம் தொடர்பான கடன்கள் மற்றும் பணப்பரிவர்த்தனைகள் சார்ந்த சேவைகளை வழங்கி வரும் டாய்ச் வங்கி, கடந்தாண்டு தனது லாப விகிதத்தில் எதிர்பாரா இழப்பை சந்தித்தது. இதனால் செலவுகளை குறைக்கும் நடவடிக்கை என்ற பெயரில் ஊழியர் பணி நீக்கத்தை கையில் எடுத்துள்ளது.

பணி நீக்கம்

டாய்ச் வங்கியின் தலைமை நிர்வாகி கிறிஸ்டியன் தைவிங், ’ஒரு நிச்சயமற்ற சூழலில் வங்கியின் செயல்திறன் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு பயணிப்பதை’ உறுதி செய்துள்ளார். மேலும் கடந்த 16 ஆண்டுகளில் மிக அதிகமான அளவில், வரிக்கு முந்தைய லாபமாக கிட்டத்தட்ட 5.7 பில்லியன் யூரோக்களை டாய்ச் வங்கி அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவை முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை தருவதற்கான புள்ளி விவரமாக இருப்பினும், கடந்தாண்டு லாபத்தில் டாய்ச் வங்கி அடிவாங்கிய முக்கியமாக பார்க்கப்படுகிறது.

லாபத்தில் சறுக்கியதை அடுத்து செலவுகளை கட்டுப்படுத்த வங்கி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. டாய்ச் வங்கியின் லாபத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட 2.5 பில்லியன் யூரோ செயல்திறனுக்கு புதிய நிர்வாக சீரமைப்பு நடவடிக்கைகள் அவசியம் என வங்கி கண்டடைந்துள்ளது. இதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, நேரடி வாடிக்கையாளர் அல்லாத பிரிவுகளில் 3,500 பணியிடங்களை குறைக்கும் முடிவை டாய்ச் எடுத்துள்ளது. இதனால் அந்த பணியிடங்களை சேர்ந்த ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட உள்ளனர்.

பணி நீக்கம்

2022-ம் ஆண்டின் கணக்கின்படி, சர்வதேசளவில் சுமார் 85,000 ஊழியர்கள் டாய்ச் வங்கியில் பணிபுரிவது குறிப்பிடத்தக்கது. ஐரோப்பிய நாடுகளை பொருளாதார மந்தநிலை மூளும் என்ற கணிப்புகளின் மத்தியில் டாய்ச் வங்கியின் பணி நீக்க நடவடிக்கை கவனம் பெறுகிறது. முன்னணி வங்கியின் இந்த அதிரடி நடவடிக்கை, அதன் துறை சார்ந்த இதர வங்களில் எதிரொலிக்கும் அபாயத்துக்கும் வித்திட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

x