மாலத்தீவில் தொடரும் பதற்றமான சூழ்நிலையில் அந்நாட்டு அதிபர் முகமது முய்சுவை பதவிநீக்கம் செய்து எதிர்க்கட்சி தலைவர் இப்ராகிம் முகமது சொலிக் புதிய அதிபராக பதவியேற்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாலத்தீவில் மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டு அதிபராக சீன ஆதரவு நிலைப்பாடு கொண்டவரான முகமது முய்சு பதவியில் உள்ளார். இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள முய்சு பல்வேறு சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளை எடுத்து சீனாவிற்கு ஆதரவான தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் (ஜன.28) மாலத்தீவு நாடாளுமன்றத்தில் அதிபர் முய்சு தலைமையிலான அரசில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 4 அமைச்சர்களுக்கு ஒப்புதல் பெறுவதற்கான சிறப்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
பின்னர் மீண்டும் நேற்று நாடாளுமன்றம் கூடிய நிலையில், புதிதாக நியமிக்கப்பட்ட 4 அமைச்சர்களுக்கு ஒப்புதல் அளிக்க முடியாது என எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. இறுதியில் அமைச்சரவையில் 1 அமைச்சரை மட்டும் சேர்க்க எதிர்க்கட்சி ஒப்புக்கொண்டது.
இதனையடுத்து மாலத்தீவு அதிபருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்மூலம் அவரை பதவிநீக்கம் செய்யவும் திட்டமிடப்பட்டு வருகிறது. நாடாளுமன்றத்தில் அதிபருக்கு எதிரான தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படும் பட்சத்தில் முய்சு, அதிபர் பதவில் இருந்து நீக்கப்பட்டு புதிய அதிபராக எதிர்க்கட்சி தலைவர் இப்ராகிம் முகமது சொலிக் பதவியேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்திய ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் தற்போதைய மாலத்தீவின் எதிர்க்கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா இடையிலான உறவு மீண்டும் பலமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.