நாட்டின் ரகசிய சட்டத்தை மீறிய வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி ஆகியோருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் இருந்தபோது அமெரிக்க தூதரகம் வாயிலாகப் பெறப்பட்ட ரகசியங்களை பகிரங்கப்படுத்தியதாக குற்றச்சாட்டுக்கு ஆளானார். இது நாட்டின் அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டத்தை மீறிய குற்றத்துக்கு வழிவகுத்ததில், நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. அப்படி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் இம்ரான் கான் மற்றும் அவரது ஆட்சிக் காலத்தில் வெளியுறவு அமைச்சராக இருந்த ஷா மஹ்மூத் குரேஷி ஆகியோர், தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு தற்போது ஆளாகி உள்ளனர்.
கடந்த 2022-ல் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வியடைந்த இம்ரான்கான் பிரதமர் பதவியை இழந்தார். அடுத்து ஆட்சியமைத்த நவாஸ் ஷெரீப்பின் ’பாகிஸ்தான் முஸ்லீம் லீக்- நவாஸ்’ ஆட்சிக்கு எதிராக இம்ரான் கான் நாடு முழுவதும் பெரும் போராட்டங்களை நடத்தினார். மக்கள் மத்தியிலான கிளர்ச்சி அதிகரித்ததில், இம்ரான்கான் மீதான வழக்குகள் தூசு தட்டப்பட்டன.
நூற்றுக்கும் மேலான வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில், சிறையில் அடைக்கப்பட்டார். நீதிமன்ற மேல்முறையீட்டில் ஒரு வழக்கின் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டாலும், அடுத்த வழக்கில் அவரது கைது மற்றும் சிறைவாசம் தொடர்ந்தது. தற்போது ரகசிய சட்ட மீறல் வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பால் இம்ரான் கானின் விடுதலை கேள்விக்குறியாகி உள்ளது. மேல் முறையீடு செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ள போதும், தேர்தல் நெருக்கத்தில் அதனால் எந்தவித பலனும் இன்றி இம்ரான் கான் முடங்கியிருப்பார்.
முன்னதாக சிறையில் இருந்தபடியே அவர் விண்ணப்பித்த 2 தொகுதிகளுக்கான வேட்புமனுக்களும் பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டன. மேலும் அவரது தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தேர்தல் சின்னமான கிரிக்கெட் பேட்டும் முடக்கப்பட்டது. தேர்தலில் போட்டியிடும் நோக்கில் பாகிஸ்தான் திரும்பியுள்ள நவாஸ் ஷெரீப் தேர்தல் பிரச்சாரத்தில் முன்னேறி வருகிறார். இம்ரான் கான் அவரது கட்சியினர் தேர்தல் களத்தில் தவித்து வருகின்றனர்.
இதனிடையே இம்ரான்கானுக்கு சிறப்பு நீதிமன்றம் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்ததை தொடர்ந்து, அவரது கட்சியினர் ஆவேசமடைந்துள்ளனர். ’போலி வழக்கில் கிடைத்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதாகவும்’ அவர்கள் அறிவித்துள்ளனர். பிப்ரவரி 8 அன்று பாகிஸ்தானின் பொதுத்தேர்தல் நடைபெற உள்ள சூழலில், இம்ரான்கானுக்கு எதிரான நீதிமன்ற தீர்ப்பு அவரை சிறையிலேயே முடக்க முயல்கிறது. எனினும் இதுவே, மக்கள் மத்தியில் அனுதாப வாக்குகளை சேர்க்கும் என இம்ரானின் பிடிஐ கட்சியினர் நம்புகின்றனர்.