பயணிகள் ரயிலும், சரக்கு ரயிலும் மோதிக் கொண்ட விபத்தில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் வங்கதேசத்தில் நடந்துள்ளது.
வங்கதேசத்தின் டாக்கா மாகாணம் கிஷோர்கஞ்ச் மாவட்டம் பைரப் ரயில் நிலையத்தில் இருந்து டாக்கா நோக்கி இகரொசிந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று மாலை புறப்பட்டுச்சென்றது. பைரப் ரயில் நிலையத்தில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்ட சில நிமிடங்களில் மாற்று தண்டவாள பாதைக்காக டிராக் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. மாற்று தண்டவாளத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் மெல்ல மாறிக்கொண்டிருந்தபோது திடீரென எக்ஸ்பிரஸ் ரயில் தண்டவாளத்தில் சரக்கு ரயில் வேகமாக வந்தது.
எக்ஸ்பிரஸ் ரயில் முழுமையாக மாற்று தண்டவாளத்திற்கு செல்வதற்கு முன் அதில் சரக்கு ரயில் வந்தது. இதில், எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் மீது சரக்கு ரயில் நேருக்கு நேர் வேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் தடம்புரண்டன. இந்த விபத்தில் ரயிலில் பயணித்த 15 பேர் உயிரிழந்தனர். மேலும், 100 பேர் படுகாயமடைந்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.