நாட்டில் எழுந்துள்ள பெரும் பொருளாதாரச் சிக்கல்களை எதிர்கொள்ள ரூ16,600 கோடி கடன் கேட்டு சீனாவிடம் பாகிஸ்தான் தேசம் கையேந்தியுள்ளது.
பாகிஸ்தான் தேசம் அறிவிக்கப்படாத திவால் நிலையில் தத்தளித்து வருகிறது. கடும் பணவீக்கம், விலைவாசி உயர்வு என பொருளாதார சீரழிவு காரணமாக நாட்டு மக்களின் அதிருப்தியையும் சம்பாதித்து உள்ளது. காபந்து அரசின் கீழ் நடக்கும் ஆட்சியும் ஒப்பேற்றும் நிர்வாகத்தையே தொடர்ந்து வருகின்றன. இவற்றுக்கிடையே பொருளாதார சவால்களை எதிர்கொள்ள காபந்து பிரதமர் அன்வர் உல் ஹக் தவித்து வருகிறார்.
இந்த வகையில், ஆயுத தளவாடங்களை உக்ரைனுக்கு விற்று பொருளாதார சிக்கலை எதிர்கொள்ளும் அளவுக்கு பாகிஸ்தான் நிலைமை மோசமடைந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக சர்வதேச நாணய நிதியத்திடம் பல பில்லியன் அமெரிக்க டாலர் கோரி பாகிஸ்தான் மன்றாடியது. ஆனால், பொதுமக்களுக்கான மானியங்கள் சிலவற்றை மட்டுப்படுத்தினால் மட்டுமே கடன் சாத்தியம் என அந்த அமைப்பு கைவிரித்தது. மானியத்தில் கைவைத்தால் பொதுமக்கள் சீற்றத்தை எதிர்கொள்ள நேரிடும் என்பதால், பாகிஸ்தான் அரசும் மௌனித்திருக்கிறது.
சர்வதேச நாணய நிதியத்துக்கு அப்பால் ஆசிய வளர்ச்சி வங்கியிடமும் பாகிஸ்தான் மன்றாடிப் பார்த்தது. பின்னர் தனது வழக்கமான புரவலரான வளைகுடா நாடுகளை அண்டியது. ஏற்கனவே பல பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கடன்களை பெற்றுள்ள பாகிஸ்தனுக்கு எந்த நிபந்தனையின் பெயரில் கூடுதல் கடன் வழங்குவது என்று வளைகுடா நாடுகள் தயங்கி வருகின்றன. இந்த நிலையில் ஆசியாவின் பெரியண்ணனாக தன்னை முன்னிறுத்தி வரும் சீனாவிடம் பாகிஸ்தான் சரணடைந்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான உபாயமாக, அதன் அண்டை நாடுகள் ஒன்றுவிடாது சீனா வளைத்து வருவதால், அதற்கு பாகிஸ்தான் எளிதில் உடன்பட்டது. பாகிஸ்தானில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள், கட்டுமானங்கள் உள்ளிட்டவற்றை மெற்கொள்ளும் சீனா அவ்வப்போது கடன்களையும் வாரி வழங்கி வருகிறது. இந்த வரிசையில் தற்போது அவசர உதவியாக பாகிஸ்தானின் ரூபாயில் 16,600 கோடி கேட்டு, காபந்து பிரதமர் அன்வர் உல் ஹக் சீனாவுக்கு கோரிக்கை கடிதம் விடுத்துள்ளார்.