பெண் பத்திரிக்கையாளர் தொடர்ந்த பாலியல் பலாத்காரம் தொடர்பான அவதூறு வழக்கில், அவருக்கு 83.3 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு வழங்குமாறு அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால் ட்ரம்ப், எதிர்வரும் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடத் தயாராகி வருகிறார். ஆனால் பொதுவெளியில் எதிர்ப்பும், உட்கட்சியில் ஆதரவுமாக பரமபத அரசியலில் விழுந்து, எழுந்து ட்ரம்ப் தவித்து வருகிறார்.
அமெரிக்க அதிபராக ஒருவர் இருமுறை பதவி வகிக்கலாம் என்பதால், முதல்முறை அதிபராக பதவியேற்கும் அதிபர்கள் மக்கள் ஆதரவைப் பொறுத்து இரண்டாவது முறையும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது வழக்கம்.
அந்த வகையில் அமெரிக்க அதிபரான டொனால்ட் ட்ரம்ப் அடுத்து வந்த தேர்தலிலும் தனது குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டதில், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஜோ பைடனிடம் தோல்வியடைந்தார். இதன் தொடர்ச்சியாக தற்போது பைடனின் ஆட்சிக்காலம் முடிவடைவதை அடுத்து, மீண்டும் குடியரசுக் கட்சி சார்பில் களம் காணத் துடிக்கிறார். அவர் எதிர்பார்த்தவாறே உட்கட்சி தேர்தலிலும் வெற்றிகரமாக முன்னேறி வருகிறார்.
இதனிடையே பொதுவெளியில் ட்ரம்ப் மதிப்பு வெகுவாய் சீரழியும் வகையில் புதிய குற்றச்சாட்டுகளும் முளைத்தன. பத்திரிக்கையாளரான ஜீன் கரோல் என்ற பெண்மணி, 1990-ம் ஆண்டில் வணிக வளாகம் ஒன்றில் வைத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக, ட்ரம்ப் மீது குற்றம்சாட்டி இருந்தார்.
இதனை அடியோடு மறுத்திருந்த ட்ரம்ப், தனது பாணியில் பெண் பத்திரிக்கையாளரை கடுமையாக சாடியதில் சர்ச்சைக்கும் ஆளானார். ட்ரம்புக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகள் பாய்வது இது முதல் முறையும் அல்ல. இளம் வயதில் ட்ரம்ப் பிளே பாயாக வலம் வந்த கதைகள் அமெரிக்காவில் புத்தகங்களாக வெளியாகி விற்பனையில் சாதனை படைத்து வருகின்றன. அப்படியான புத்தக விற்பனைக்காகவும், சுய விளம்பரத்துக்காகவும் ஜீன் கரோல் தனக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு நடத்துவதாக ட்ரம்ப் பதிலடி தந்து வந்தார்.
இதனிடையே 2019-ல் ட்ரம்புக்கு எதிராக ஜீன் கரோல் தொடர்ந்தார். பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட ட்ரம்ப் அதை அம்பலப்படுத்தியதற்காக, தன்னை தொடர் அவதூறு செய்வதாக நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ட்ரம்ப் ஆரம்பித்த அவதூறினை அவரது ஆதரவாளர்களும் ஜீன் கரோலுக்கு எதிராக தொடர்ந்தது ஆவணங்களுடன் சாட்சியமானது.
அந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வெளியாகி உள்ளது. இதன்படி ட்ரம்ப் அவதூறால் பாதிக்கப்பட்ட ஜீன் கரோலுக்கு நஷ்ட ஈடாக 83.3 மில்லியன் டாலர் வழங்குமாறு, ட்ரம்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தொகை இந்திய கரன்சி மதிப்பில் ரூ692 கோடியாகும். இந்த தீர்ப்பையும் தன் போக்கில் விமர்சித்துள்ளார் ட்ரம்ப். எனினும் இந்த தீர்ப்பின் மூலம் பொதுவெளியில் ட்ரம்ப் இமேஜ் மேலும் அடிவாங்கியிருக்கிறது.
இதையும் வாசிக்கலாமே...
தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்க இன்று இரவு ஸ்பெயின் புறப்படுகிறர் முதல்வர் மு.க.ஸ்டாலின்!