காசா மீது வெறிகொண்டு தாக்குதலை தொடர்ந்து வரும் இஸ்ரேலுக்கு, அதன் பிரதான ஆதரவு தேசமான அமெரிக்காவிலேயே அதிருப்தி எழுந்துள்ளது.
காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் தொடங்கி மூன்றரை மாதங்களை கடந்துள்ளது. அக்.7 அன்று இஸ்ரேலுக்குள் புகுந்து 1200 பேர்களை கொன்ற ஹமாஸ் ஆயுதக் குழுவினரை பூண்டோடு அழிப்பது, அவர்கள் வசமிருக்கும் பிணைக்கைதிகளை மீட்பது என்ற இரு பிரதான நோக்கங்களின் அடிப்படையில் இஸ்ரேல் பாதுகாப்பு படைகளின் தாக்குதல்கள் காசா மீது கட்டவிழ்த்து விடப்பட்டன. ஆனால் காசா ஆயுத குழுக்களை அழிப்பதை விட அப்பாவி பாலஸ்தீன மக்களை கொல்வதையே இஸ்ரேலின் தாக்குதல் இதுவரை சாதித்துள்ளது.
இதற்கு சர்வதேச அளவில் எதிர்ப்பும் அதிகரித்துள்ளது. ஆனால் அவற்றை இஸ்ரேல் பொருட்படுத்துவதாக இல்லை. காசாவில் அப்பாவி மக்களை இஸ்ரேல் கொன்று குவிப்பதாக, சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா முறையிட்டது. இஸ்ரேலுக்கு எதிராக பல்வேறு நாடுகளும் அழுத்தம் கொடுத்து வருகின்றன. ஆனால் அவற்றைப் புறந்தள்ளி, காசாவில் தனது தாக்குதல்களை தொடர்ந்து இஸ்ரேல் வருகிறது. பயங்கரவாதிகள் ஒளிந்திருக்கும் இடங்கள் என்று கூறி, கல்வி நிலையங்கள், அகதி முகாம்கள், மருத்துவனைகள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்டவற்றையும் இஸ்ரேல் தகர்த்து வருகிறது.
இஸ்ரேலின் இந்தப் போக்கிற்கு அதன் பிரதான ஆதரவு தேசமான அமெரிக்காவில் இருந்தும் தற்போது அதிருப்தி கிளம்பியுள்ளது. இஸ்ரேலுக்கு, அமெரிக்கா தனது நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி வருவதன் மத்தியில், அமெரிக்கர்கள் மத்தியில் இஸ்ரேலின் காசா தாக்குதலுக்கு கண்டனங்கள் பிறந்துள்ளன. ‘யூகவ்’ என்ற பெயரிலான ஆன்லைன் ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் இந்த விவரம் வெளிப்பட்டுள்ளது. ’காசா மீதான இஸ்ரேல் தாக்குதல் நடவடிக்கை இனப்படுகொலையா, இல்லையா’ என்பது இந்த கருத்துக்கணிப்பின் பிரதான கேள்வியாக இருந்தது.
இந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 18 முதல் 29 வயது வரையிலான அமெரிக்கர்களில், 49 சதவீதத்தினர் இஸ்ரேல் நடத்துவது இனப்படுகொலை என்று தெரிவித்துள்ளனர். மாறாக 24 சதவீதத்தினர் இஸ்ரேல் நடத்துவது இனப்படுகொலை அல்ல என தெரிவித்துள்ளனர். 27 சதவீதத்தினர் இதில் முடிவு எட்ட இயலவில்லை என தெரிவித்துள்ளனர். கருத்துக்கணிப்பில் பங்கேற்ற இளைஞர்களில் சுமார் பாதி பேர் இஸ்ரேலுக்கு எதிராக கருத்து தெரிவித்திருப்பது, அமெரிக்கர்கள் மத்தியில் இஸ்ரேல் மீதான அதிருப்தி அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டுகிறது.
இதையும் வாசிக்கலாமே...
நான் சாகும் வரை முஸ்லிம் தான்... நடிகை குஷ்பு உணர்ச்சிகர பதிவு!
நடிகர் விஜய் ரகசிய ஆலோசனை... நெருங்கும் தேர்தல்... பரபரக்கும் அரசியல் களம்!
போதையில் காதலனை 108 முறை குத்திக் கொன்ற இளம்பெண்!
கங்கையில் மூழ்கடித்து 5 வயது குழந்தை கொடூரக் கொலை: மூடநம்பிக்கையால் பெற்றோர் வெறிச்செயல்!
டெல்லியில் 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் குளிர்... மூடுபனியால் ஆரஞ்சு அலர்ட்!