இதுநாள் வரை மதுவுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த சவுதி அரேபியாவில், முதன்முறையாக மதுக்கடை திறப்பதற்கான அறிவிப்பை இளவரசர் முகமது பின் சல்மான் வெளியிட்டுள்ளார்.
சவுதி உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளில் மது அருந்த கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இஸ்லாமிய ஆட்சி முறை நடைமுறையில் இருக்கும் சவுதி அரேபியாவை, அந்நாட்டு இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையிலான அரசு, ஆட்சி செய்து வருகிறது. இவர் தன் ஆட்சியில், எண்ணெய் வளத்தைக் கடந்து, பொருளாதாரத்தை மேம்படுத்த `விஷன் 2030′ ஐ அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
மதச்சார்பற்ற சுற்றுலா, இசை நிகழ்ச்சிகள் மற்றும் திரையரங்குகளுக்கு அனுமதி, பெண்களை வாகனம் ஓட்ட அனுமதித்தல், தளவாட மையங்களை உருவாக்குதல் உள்ளிட்டவை `விஷன் 2030′ என்ற திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதன் ஒரு பகுதியாக சவுதி அரேபியாவை சுற்றுலா மற்றும் வணிகத்தளமாக மாற்றும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இஸ்லாத்தில் மது அருந்துவது தடை செய்யப்பட்டிருப்பதால், சவுதி அரேபியாவில் மது விற்பனைக்கும் தடை உள்ளது. சவுதி அரேபியாவில் மது அருந்துபவர்களுக்குத் தண்டனையாக கசையடிகள், நாடு கடத்தல், அபராதம், சிறைத் தண்டனையும், வெளிநாட்டவர் என்றால், உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றுதல் போன்ற கடுமையான சட்டங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தற்போது, சவுதி அரேபியாவை சுற்றுலா மற்றும் வணிக தளமாக மாற்றும் நோக்கத்துக்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாக சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் முதல் மதுபானக் கடையைத் திறக்க திட்டமிட்டிருக்கிறது. இந்த மதுக்கடையில், முஸ்லிம் அல்லாத வெளிநாட்டு தூதுவர்களுக்கு மது விற்பனை செய்ய திட்டமிடப் பட்டுள்ளது.
இந்த புதிய திட்டத்தின் மூலம், வெளிநாட்டுத் தூதர்கள் மதுவைப் பெற இதற்கென உருவாக்கப்பட்டிருக்கும் வெளியுறவு அமைச்சக அலுவலகத்திடமிருந்து, அனுமதிக் குறியீட்டைப் பெற்று, மொபைல் செயலி மூலம் பதிவுசெய்ய வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் சவுதி அரேபியாவுக்கு வரும் வெளிநாட்டினருக்கு மது விற்பனை குறித்த அறிவிப்புகள் எதுவுமில்லை.