இலங்கையில் இன்று அதிகாலை நடைபெற்ற சாலை விபத்தில் அந்நாட்டின் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழந்தார்.
இலங்கையின் காட்டுநாயாகாவில் இருந்து கொழும்பு நோக்கி தனது காரில் இராஜங்க அமைச்சர் சனத் நிஷாந்த இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தார். அப்போது உதவியாளர் உள்ளிட்ட பலரும் அவரது காரில் உடனிருந்தனர்.
அப்போது எதிரே வந்த கண்டெய்னர் லாரியில் சனத் நிஷாந்த சென்று கொண்டிருந்த கார் பயங்கரமாக மோதியது. இதில் அமைச்சரின் கார் முற்றிலுமாக நொறுங்கி சேதம் அடைந்தது. இதனால் அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்டோர் காருக்குள் சிக்கிக் கொண்டனர்
தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸார் அமைச்சர் சனத் நிஷாந்த உட்பட 3 பேரை படுகாயங்களுடன் மீட்டு ராகம மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழந்தார். மேலும் அமைச்சருடன் விபத்தில் சிக்கிய அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி ஜெயக்கொடியும் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாலை விபத்தில் இலங்கை ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழந்துள்ளது அந்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.