செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பு அதிக செயல்பாடு கொண்டதாக இருக்கிறது. மேல்தட்டில் உண்டான அழுத்தம் காரணமாக அங்கே கடந்த ஆண்டு மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்
செவ்வாய்க் கிரகத்தில் மனிதர்கள் சென்று வசிப்பது தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. சமகாலத்தில், இதற்கான சாத்தியக் கூறுகள் மிகவும் அரிதாகவே இருந்தாலும், செவ்வாய்க் கிரகத்தின் இயற்கைப் பண்புகள் குறித்து ஆய்வுகள் தீவிரமடைந்து வருகின்றன. இந்நிலையில், செவ்வாய்க் கிரகத்தில் அவ்வப்போது ஏற்படும் பூகம்பம் தொடர்பாக 'Geophysical Research Letters' என்ற அறிவியல் நாளிதழில் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு, செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட 'செவ்வாய் நிலநடுக்கம்' என்ற மிகவும் அரிதான நிகழ்வை நாசாவின் இன்சைட் லேண்டர் பதிவு செய்தது. ரிக்டர் அளவுகோளில் 4.7 ஆக பதிவாகிய இந்த அதிர்ச்சி, கிட்டத்தட்ட 6 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.
நமது பூமிக்கடியில் இருப்பது போன்று தளத்தட்டுகள் (Plates) செவ்வாயில் இல்லாதபோது, பலம் வாய்ந்த விண்கற்களுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதி வந்தனர். இந்நிலையில், செவ்வாயின் மேற்பரப்பு பூமியைப் போன்றே அதிக செயல்பாடு கொண்டதாக இருப்பதாகவும், 2022ல் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு செவ்வாயின் மேற்பரப்பில் உண்டான அதிர்வே காரணம் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இதுகுறித்து, அறிவியல் நாளிதழ் கட்டுரையின் முதன்மை ஆசிரியர் பெஞ்சமின் பெர்னாண்டோ கூறுகையில், “2022 செவ்வாய் நிலநடுக்கம் குறித்து பல்வேறு நாடுகள், பல்வேறு தரப்பினரும் ஆய்வு செய்து வந்தன. இருப்பினும், அனைத்து தரவுகளும் ஒருங்கிணைந்த முறையில் தொகுக்கப்படவில்லை.
எங்களின் ஆய்வின் முக்கியத்துவம் அதில்தான் இருக்கிறது என்று நான் நம்புகிறேன். பலவேறு தரப்பினர் தயாரித்த தரவுகளைக் கொண்டு, செவ்வாய் கோளின் 144.8 மில்லியன் சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை ஆய்வு செய்தோம். இதில், விண்கற்கள் மோதி நிலநடுக்கம் ஏற்பட்டதற்கான எந்த சான்றும் கிடைக்கவில்லை" என்று தெரிவித்தார்.
மேலும், “நமது பூமிக்கடியில் இருப்பது போன்று தளத்தட்டுகள் (Plates) செவ்வாயில் இல்லாதபோதும், அதன் நிலப்பரப்பு அதிக செயல்பாடு கொண்டதாக இருக்கிறது. மேல்தட்டில் உண்டான அழுத்தம் காரணமாக நிலநடுக்கம் ஏற்பட்டதை கணிக்க முடிகிறது. கோளின் மேற்பரப்பில் இன்று காணப்படும் அழுத்தங்கள், பல பில்லியன் ஆண்டுகால பரிணாம வளர்ச்சியின் விளைவாகும். நிலப்பரப்பின் வெவ்வேறு பகுதிகள் வெவ்வேறு விகிதங்களில் குளிர்ச்சி அடைவதும், சுருங்குவதும் இதில் அடங்கும்” என்றும் அவர் தெரிவித்தார்.
நாம் முன்பு கணித்ததை விட, செவ்வாய் கோளின் மேற்பரப்பு அதிக அசைவுகள் கொண்டதாக இருப்பதால், ஒருவேளை, செவ்வாய்க்கு குடிபெயரும் நிலை வந்தால், இந்த தரவுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும்!
இதையும் வாசிக்கலாமே...
பங்காரு அடிகளார் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
அதிர்ச்சி... காரில் கட்டுக்கட்டாக லஞ்சப் பணம்; சோதனையில் சிக்கிய பெண் மோட்டார் வாகன ஆய்வாளர்