காசா மீதான இஸ்ரேலிய பாதுகாப்பு படைகளின் தாக்குதலில், ஒவ்வொரு 15 மணி நேரத்துக்கும் ஒரு குழந்தையேனும் பலியாவதாகவும், இதன் பொருட்டேனும் உடனடி போர் நிறுத்தம் அங்கே அமலாக வேண்டும் என்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கான ’சேவ் தி சில்ட்ரன்’ எனற சர்வதேச அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
காசா மீதான இஸ்ரேலின் முதல் 11 நாள் வான்வழித் தாக்குதல்களில் மட்டும் ஆயிரத்துக்கும் மேலான குழந்தைகள் கொல்லப்பட்டிருப்பதாகவும், அங்கு பலியாகும் பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒருவர் குழந்தையாக இருப்பதாகவும் சேவ் தி சில்ட்ரன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
குண்டுவீச்சுத் தாக்குதல்கள், இடியும் கட்டிடங்கள் என நேரிடை மரணங்கள் மட்டுமன்றி காயமடையும் குழந்தைகளுக்கு போதிய மருத்துவ வசதி இல்லாதது, உணவு மற்றும் நீர் இல்லாததாலும் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். காசாவுக்கான நீர் வரத்து மற்றும் மின்சாரத்தை இஸ்ரேல் துண்டிப்பது மற்றும் கட்டுப்படுத்துவது ஆகியவற்றால், முதல் பாதிப்பு குழந்தைகளுக்கு நேர்கிறது.
மேலும் காசாவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் ஜெனரேட்டர்களை இயக்குவதற்கான டீசல் எரிபொருளின் இருப்பு வேகமாக குறைந்து வருவதாகவும், இதனால் குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான நோயாளிகள் உடனடி ஆபத்தில் உள்ளதாகவும் நிவாரணப்பணியில் ஈடுபட்டிருக்கும் தன்னார்வலர் அமைப்பினர் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து சேவ் தி சில்ட்ரன்ஸ் இயக்குநர் ஜேசன் லீ, “காசாவின் குழந்தைகள் உயிரைக் காப்பாற்ற உடனடியாக போர் நிறுத்தம் வேண்டும். இதற்கு சர்வதேச சமூகங்கள் அழுத்தம் தர வேண்டும். ஆயிரக்கணக்கான குழந்தைகளின் உயிர்கள் மேலும் பலியாவதை தடுக்கவேனும் போர் நிறுத்தம் அவசியமாகிறது” என்று தெரிவித்திருக்கிறார்.
பாலஸ்தீன குழந்தைகள் மட்டுமன்றி, இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில் 14 குழந்தைகள் இறந்துள்ளனர். காசாவில் கடத்தப்பட்டு பணயக்கைதிகளாக ஹமாஸ் வசமிருக்கும்199 பேரில் குழந்தைகளும் அடங்குவார்கள். இந்த இருதரப்பு மோதலில் நேரடியான உயிர்ப்பலிகள் மட்டுமன்றி மனரீதியாகவும், உணர்வுபூர்வமாக குழந்தைகள் அடையும் பாதிப்பும் அதிகரித்து வருகிறது.