கனடா அரசின் திடீர் முடிவு; அதிர்ச்சியில் இந்திய மாணவர்கள்!


மாணவர்கள் நுழைவு விசா எண்ணிக்கையை குறைத்த கனடா

சர்வதேச மாணவர்களுக்கான விசா வழங்குதலை குறைப்பதாக கனடா அரசு திடீரென அறிவித்துள்ள நிலையில், இந்திய மாணவர்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படுமா என்கிற அச்சம் நிலவி வருகிறது.

இந்தியாவில் படித்து முடித்துவிட்டு மேற்படிப்பிற்காக வெளிநாடுகளுக்கு செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மருத்துவ படிப்புகளுக்காக அமெரிக்கா, கனடா, உக்ரைன், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு செல்வோரின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது.

கடந்த 2021ம் ஆண்டின் புள்ளி விவரங்களின்படி சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் தற்போது பயின்று வருகின்றனர். இதில் கனடாவில் கணிசமான இந்திய மாணவர்கள் தற்போது மேற்படிப்பு பயின்று வருகின்றனர்.

நடப்பாண்டில் 35 சதவீத விசாக்கள் குறைப்பு

இந்நிலையில், கனடாவில் படிக்க சர்வதேச மாணவர்களுக்கு வழங்கும் நுழைவு விசா எண்ணிக்கையை அடுத்து வரும் 2 ஆண்டுகளுக்கு குறைப்பதாக கனடா அறிவித்துள்ளது இந்திய மாணவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. கனடாவிற்கு செல்லும் பிற நாட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக பேசிய கனடாவின் குடியேற்றத்துறை அமைச்சர் மார்க் மில்லர், ”அதிகளவில் பிற நாட்டவர்கள் கனடா வருவதால், அவர்கள் தங்குவதற்கு போதிய வீடுகள் இல்லாமல் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் இந்த நடவடிக்கையை கனடா எடுத்துள்ளது. அடுத்த ஆண்டு கனடாவில் படிப்பதற்கு வழங்கப்பட உள்ள புதிய அனுமதி ஆவணங்களின் எண்ணிக்கை நடப்பாண்டு இறுதியில் மறு மதிப்பீடு செய்யப்படும்” என்றார்.

கனடாவின் முடிவால் இந்திய மாணவர்கள் கலக்கம்

கனடா அரசின் இந்த புதிய அறிவிப்பு மூலம், அந்நாட்டில் படிப்பதற்கு வழங்கப்படும் புதிய விசாக்களின் எண்ணிக்கை 35 சதவீதம் வரை குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் இந்த எண்ணிக்கை 3.64 லட்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த எண்ணிக்கை குறைப்பு இந்திய மாணவர்களை பெருமளவில் பாதிக்கலாம் என்கிற அச்சம் எழுந்துள்ளது. சர்வதேச நாடுகளுக்கு செல்லும் இந்திய மாணவர்களில் பெரும்பாலானவர்களுக்கு கனடா நாடு முதல் தேர்வாக இருந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த ஆண்டு கனடாவிற்கு படிக்க சென்ற இந்திய மாணவர்கள் தாங்கள் விரும்பிய சில நிறுவனங்கள், மோசடியாக மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், போதிய இருப்பிட வசதி, சரியான கல்வி நிலையங்கள் ஆகியவை வழங்கப்படவில்லை எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மேலும் சீக்கிய மதத் தலைவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கனடாவிற்கும் இந்தியாவிற்கும் இடையேயான வெளிநாட்டு தூதரக உறவுகளில் விரிசல் ஏற்பட்டிருக்கும் நிலையில், இந்த புதிய அறிவிப்பு இந்திய மாணவர்களிடையே மேலும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

x